அதிமுக கைவிரித்ததால் திமுகவுடன் கைகோக்கிறதா தேமுதிக? – பாராட்டிய பிரேமலதா… வாழ்த்துச் சொன்ன முதல்வர்!

தமிழக பட்ஜெட்டை பிரேமலதா புகழ்ந்து தள்ளியது… பிரேமலதாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் ஸ்டாலின் போனில் அழைத்து வாழ்த்துச் சொன்னது – இதெல்லாம் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதற்கான முன்னோட்டமா என்ற கேள்வியெழுந்துள்ளது. ‘​மாற்றி மாற்றி கூட்டணி பேரம் பேசும் கட்சி’ எனும் விமர்​சனத்தை உடைக்க, பாஜக விரித்த தூண்டில்​களில் சிக்காமல், தொடர்ந்து அதிமுக ஆதரவு நிலைப்​பாட்​டிலேயே இருந்து வந்தார் பிரேமலதா.

2026-ல் அதிமுக கூட்ட​ணியில் கணிசமான தொகுதி​களில் வெல்ல​வேண்டும் என்ற கணக்கு அவரிடம் இருந்தது. “அதிமுக ஆட்சி​யமைத்தால் அண்ணி​யாருக்கு துணை முதல்வர் பதவி” எனவும் சொல்லிவந்​தார்கள் தேமுதி​க-​வினர். இது எல்லா​வற்​றையும் குழப்பி அடித்​திருக்​கிறது ராஜ்யசபா தேர்தல்.

அதிமுக தங்களுக்கு ராஜ்யசபா எம்.பி சீட் கொடுக்கும் என்று பெருத்த நம்பிக்​கையில் இருந்தார் பிரேமலதா. ஆனால், “நாங்கள் அப்படி எதுவும் ஒப்பந்தம் போடவில்​லையே” என தடாலடியாக கைவிரித்தார் இபிஎஸ். இதுதான் இப்போது பிரேமலதாவை மாற்றி யோசிக்க வைத்துள்ளது.

தேமுதி​க-வுக்கு ராஜ்யசபா சீட் இல்லை என அழுத்திச் சொன்ன அதிமுக, அன்புமணியின் ராஜ்யசபா சீட்டுக்காக அணுகிய பாமக-வுக்கு பாசிட்​டிவான பதிலைச் சொல்லி இருப்பதாக தெரிகிறது. இதனால், மக்களவைத் தேர்தலில் அதிமுக-வை கழட்டி​விட்டு பாஜக கூட்ட​ணிக்கு போன பாமக-​விடம் பரிவாகப் பேசுகி​றார்கள். தோள்கொடுத்து நின்ற எங்களை உதாசீனப்​படுத்​துகி​றார்கள் என்று குமுறுகிறது தேமுதிக முகாம்.

இதைப் புரிந்து கொண்டே திமுக-வை மெல்லத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்​திருக்​கிறார் பிரேமலதா. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், தமிழக பட்ஜெட் என அடுத்​தடுத்து திமுக ஆதரவு நிலைப்​பாட்டை எடுத்​திருக்​கிறார் பிரேமலதா. இதுதான் சமயமென, முதல்வர் ஸ்டாலினும், பிரேமல​தாவுக்கு பிறந்​தநாள் வாழ்த்துச் சொல்லி திக்கு​முக்காட வைத்திருக்​கி​றார்.

அதிமுக தரப்பில் பாஜக, பாமக, தவெக, நாதக என பல கட்சிகளிடமும் கூட்டணி பேச்சு​வார்த்​தைகள் நடப்ப​தாகச் சொல்கி​றார்கள். இந்த நேரத்தில் நாமும் கொஞ்சம் அரசியல் செய்தால்தான் கவுரவமான தொகுதிகளை பெறலாம் என்று நினைக்​கிறார் பிரேமலதா. அதற்கேற்ப திமுக-வும் தேமுதிக விஷயத்தில் கொஞ்சம் இறங்கிவந்​துள்ளது.

வடக்கிலும் தென் மாவட்​டங்​களிலும் தேமுதி​க-வுக்கு வாக்கு​வங்கி உள்ளது. வட மாவட்​டங்​களில் பாமக-வை​யும், தென் மாவட்​டங்​களில் பாஜக-வையும் சமாளிக்க தேமுதிக உதவும் என யோசிக்​கிறது திமுக. அதிமுக தர சம்மதிக்காத ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்க முன்வந்தால் கண்ணை மூடிக்​கொண்டு அறிவால​யத்​துக்கு புறப்​பட்டு விடுவார் பிரேமலதா.

தேர்தல் பிரச்​சா​ரத்​துக்கு பிரேமலதா, விஜயபிர​பாகரன் உதவுவார்கள். பரவலாக தமிழகம் முழுதும் வாக்கு​வங்கி உள்ள கட்சி தேமுதிக. எனவே, கூட்டணியை பலப்படுத்த தேமுதிக-வை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக, திமுக இரண்டுமே முயற்​சிக்​கும். ஆனால், கடந்த காலங்​களில் இரண்டு பக்கமும் மாறி மாறி கூட்டணி பேசி பெரும் விமர்​சனத்​துக்​குள்​ளானது தேமுதிக. இதையெல்லாம் மனதில் வைத்து சாணக்​கியத்தனமாக பிரேமலதா காய்நகர்த்த வேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்​சகர்கள்.

தேமுதி​க-வின் தற்போதைய நிலை குறித்து பேசும் தேமுதிக நிர்வாகிகளோ, “இப்போது மாவட்​டம்​தோறும் கட்சிக் கட்டமைப்பை வலுப்​படுத்தும் வேலையில் உள்ளோம். தேமுதிக தேர்தல் அறிக்​கையில் இருந்த பல திட்டங்களை அறிவித்​ததால் பட்ஜெட்டை ஆதரித்​தோம்.

இதில் வேறெந்த அரசியலும் இல்லை. மாண்பின் அடிப்​படையில் முதல்வர் பிரேமல​தாவுக்கு பிறந்​தநாள் வாழ்த்துச் சொன்னார். 2026 மார்ச்சில் கூட்டணி குறித்து அறிவிப்பதாக பிரேமலதா சொல்லி​யுள்​ளார். ராஜ்யசபா சீட் குறித்தும் அவர் உரிய நேரத்தில் அறிவிப்​பார்” என்கி​றார்கள்.

ஆயிரம் சொன்னாலும், நீங்கள் இல்லை என்றால் எங்களுக்கு இன்னொரு ஆப்ஷன் இருக்​கிறது என்பதை அதிமுக தலைமைக்கு மறைமுகமாக உணர்த்தவே பிரேமலதா திடீரென திமுக அரசைப் பாராட்ட ஆரம்பித்​திருப்பது போல் தெரிகிறது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.