புதுடெல்லி: சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தும்போது பெண்கள், குழந்தைகளின் கைகளில் விலங்கு போடவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வருகிறார். அதன்படி முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த இந்தியர்களையும் அமெரிக்கா ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. அப்போது இந்திய பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரின் கை, கால்களில் விலங்கிட்டு நாடு கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி 5-ம் தேதி அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டபோது இந்தியர்கள் பலர் தாய்நாடு வந்தனர். அவர்களுடைய கை, கால்களில் விலங்கிட்டு அழைத்து வந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமெரிக்க அரசின் கவனத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாக கொண்டு சென்று கண்டனத்தை பதிவு செய்தது. அதன்பிறகு பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதிகளில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் தாய்நாடு வந்தடைந்தனர். அவர்களுக்கு குறிப்பாக பெண்கள், குழந்தைகளின் கை, கால்களில் விலங்கிடவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதியாக தெரிவித்தனர். இதை இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் நாடு கடத்தப்பட்டு இந்தியா வந்தடைந்தவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தி உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தும்போது பாதுகாப்பு காரணங்களுக்காக கை, கால்களில் விலங்கிடுவது கடந்த 2012-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அந்த விதிமுறைகளின்படிதான் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை நாடு கடத்தும்போது அமெரிக்க அரசு விலங்கிட்டு அனுப்புகிறது. எனினும், இந்திய பெண்கள், குழந்தைகளின் கை, கால்களில் விலங்கிடப்படவில்லை. இவ்வாறு மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. விசா முடிந்த பிறகு அல்லது சட்டவிரோதமாக குடியேறிய குற்றத்துக்காக கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை 388 இந்தியர்கள், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு தாய்நாடு வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.