வாஷிங்டன்: 9 மாத கால காத்திருப்புக்கு பின்னர் அண்மையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பினார் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அவரது 8 நாள் பயணம் 9 மாத கால பயணமாக மாறிய நிலையில் அவருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.
“யாரும் என்னிடம் அது குறித்து எதுவும் சொல்லவில்லை. அப்படி இருந்தால் எனது சொந்த பணத்தை கொடுக்க தயார்” என ட்ரம்ப் தெரிவித்தார். பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு ட்ரம்ப் இப்படி பதில் அளித்தார்.
மேலும், எலான் மஸ்க்கை அவர் போற்றியுள்ளார். “எலான் மஸ்க் மட்டும் இல்லையென்றால் இது சாத்தியமில்லை. அவர் இல்லையென்றால் நீண்ட நாட்கள் விண்வெளியில் அவர்கள் இருந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஏனெனில், விண்வெளியில் 9 முதல் 10 மாதங்கள் வரையில் இருந்தால் உடல்நிலை மோசமாகும். அதுவும் நமக்கு சிக்கலாக அமைந்திருக்கும். நமக்கு போதுமான அவகாசமும் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்” என ட்ரம்ப் தெரிவித்தார்.
விண்வெளியில் சுமார் 286 நாட்கள் சுனிதா வில்லியம்ஸ் சிக்கி இருந்தார். அவரை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு அழைத்து வந்தது. நாசா விஞ்ஞானிகள் அமெரிக்க அரசின் ஊழியர்கள். அதனால் அவர்களுக்கு வழக்கமான ஊதியம் தான் வழங்கப்படும். பணியில் கூடுதல் நேரம், விண்வெளி பயணம் என எதுவாக இருந்தாலும் அதில் மாற்றம் இருக்காது. ஏனெனில் விண்வெளி வீரர்களின் பயணம், உணவு, தங்குவது என அனைத்து செலவுகளையும் நாசா கவனித்துக் கொள்கிறது. இதோடு கூடுதலாக விண்வெளியில் தங்கி இருப்பவர்களுக்கு 5 டாலர்கள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 286 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த சுனிதாவுக்கு மொத்தம் 1430 டாலர்கள் வழங்கப்படும். இந்திய மதிப்பு ரூ.1,22,980. இதோடு சேர்த்து ஆண்டு ஊதியமாக 94,998 டாலர்கள் சுனிதாவுக்கு கிடைக்கும். இதன் இந்திய மதிப்பு ரூ.81,69,861 ஆகும்.