அச்சமூட்டும் வில்லன் கதாபாத்திரங்கள் என லிஸ்ட் எடுத்தால் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாகப் பொருந்திப் போகும் சில ஓ.ஜி நடிகர்கள் அதில் வருவார்கள். அந்த லிஸ்டில் முக்கியமானவராக நடிகர் ஓ.ஏ.கே. சுந்தர் நிச்சயமாக இருப்பார்! இவரின் தந்தை பழம்பெரும் நடிகர் ஓ.ஏ.கே. தேவரும் வில்லன் கதாபாத்திரங்களுக்குப் பெயர் போனவர். சமீபத்தில் வெளியான `சுழல் 2′ வெப் சீரிஸிலும் ஓ.ஏ.கே. சுந்தர் நடித்திருந்தார். இவர் நடித்திருந்த `வேல்’, `விருமாண்டி’ படங்களின் அதே கேரக்டர் வைப்ஸை இந்த சீரிஸிலும் மீண்டும் கொண்டு வந்திருந்தார். இதுமட்டுமல்ல, கடந்த வாரம் இவர் நடித்திருந்த `எம்.குமரன், சன் ஆஃப் மகாலட்சுமி’ திரைப்படமும் ரீ ரிலீஸ் ஆகியிருந்தது. இப்படியான விஷயங்களுடன் அவரின் கரியர் பற்றின சில முக்கியமான விஷயங்களைப் புரட்டினோம்….
ரீ ரிலீஸ்தான் இப்போ டிரெண்ட். கடந்த வாரம் நீங்க நடித்திருந்த `எம். குமரன், சன் ஆஃப் மகாலட்சுமி’ திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியிருந்தது. அந்த படத்தைப் பற்றி மறக்க முடியாத விஷயங்கள் ….
இந்தப் படம் ரவி மோகனோட இரண்டாவது திரைப்படம். அந்தப் படத்துல என்னுடைய கதாபாத்திரம் ஒவ்வொரு நாளும் விரிவடைஞ்சுகிட்டே இருந்தது. விவேக் சாருக்கும் எனக்குமான காமெடி தொடங்கி படத்துல பல விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயமும் இருந்தது. ஒரு காட்சியில நான் ரவி மோகானுக்கு பாக்ஸிங் பண்றதுக்கு ஊக்கம் கொடுப்பேன். அப்போ எனக்கு பின்னாடி ஒருத்தர் நிப்பாரு. அந்தக் கதாபாத்திரத்துல நடிச்சது விஜய் சேதுபதிதான். இந்த விஷயத்தை ரொம்ப நாட்களுக்குப் பிறகு அவரே சொல்லியிருந்தார்.

விவேக் சாரை எந்தளவுக்கு மிஸ் பண்றீங்க?
ரொம்ப… நவம்பர் 19-ம் தேதி வந்தாலே வருடந்தோறும் அவருக்கு வாழ்த்துச் சொல்லுவேன். நேர்ல இல்லைனாலும் தொடர்ந்து போன்ல பேசிக்குவோம். எனக்கு வாழ்க்கைக்கான அட்வைஸ் கொடுப்பாரு. ரொம்பவே காமெடியான விஷயங்கள் அதிகமாக பேசிக்குவோம். அறிவார்ந்த விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுப்பாரு. அவர் இப்போ இல்லைனு நினைக்கும்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கு! `எம். குமரன், சன் ஆஃப் மகாலட்சுமி’ திரைப்படத்துல அவருடைய காமெடி ரொம்பவே முக்கியமானது. படத்துல சட்டுனு நகைச்சுவையாக பன்ச் வசனங்கள் போடுவாரு. இப்போ அவரை ரொம்ப மிஸ் பண்றேன்.
`வேல்’, `விருமாண்டி’ திரைப்படங்களோட தோற்றம் மாதிரியே சமீபத்துல `சுழல் 2′ வெப் சீரிஸ்ல மிரட்டியிருந்தீங்களே!
நான் புராஜெக்ட்களை கொஞ்சம் தேர்ந்தெடுத்துதான் பண்ணுவேன். அப்படி தேர்வு செய்யும்பொது என்னுடைய கதாபாத்திரத்தைத் தாண்டி மொத்தமாக கதைக்கான முக்கியத்துவம் எப்படி இருக்குன்னு நான் பார்ப்பேன். `சுழல் 1′ சீரிஸ் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கு. இந்த இரண்டாம் பக்கத்துல நான் மொத்தமாக ஒரு எபிசோட்தான் வருவேன். ஆனா, என்னுடைய கதாபாத்திரத்துல வெவ்வேறு பரிணாமத்தை இயக்குநர்கள் காட்டியிருந்தாங்க. உலகளவுல, இந்த சீரிஸூக்கு ரீச் கிடைச்சிருக்கு. எனக்கு பலரும் கால் பண்ணி வாழ்த்துறாங்க.

தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்கள்ல நடிக்கிறீங்க! ஒரே மாதிரி இல்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு உங்களை எப்படி வேறுபடுத்திக் காட்டுவீங்க?
எடுத்துக்காட்டுக்கு ஒன்னு சொல்றேன், `கிடாரி’ படத்துல எல்லோருமே ரஃப்பாக இருப்பாங்க. என்னுடைய கதாபாத்திரமும் முதல்ல அப்படித்தான் இருந்தது. அதுல இருந்து வேறுபடுத்தி காட்டணும்னு இயக்குநர்கிட்ட இப்படியான சில விஷயங்களை பண்ணலாமான்னு கேட்டேன். அப்புறம் அந்த கதாபாத்திரத்துல ஒரு காமெடி தன்மையையும் சேர்த்தேன். ஒளிப்பதிவாளரும் இந்தக் கதாபாத்திரத்துக்கு இந்த காமெடி செட் ஆகுதுனு சொன்னாரு. நானும் அப்படியே பண்ணினேன். அந்தக் கதாபாத்திரமும் அப்போ பேசப்பட்டது. அதே மாதிரி குடும்பங்களை மையப்படுத்திய கதைகள்ல 20 கதாபாத்திரங்களுக்கு மேல இருக்கும். `வேல்’ படத்துல என்னை வேறுபடுத்தி காட்டணும்னு ஒரு பெரிய மீசையை எடுத்து ஓட்டிகிட்டேன். அதுவே ஒரு `மீசைக்கார சித்தப்பா’னு ஒரு பாடலாகவும் வந்தது. அந்தக் கதாபாத்திரம் இன்னைக்கு வரைக்கு முக்கியமானதாக இருக்கு! இப்படிதான் சில வழிகளை பின்பற்றி வேறுபடுத்தி காட்டுவேன்.
உங்களுடைய ஏதாவது ஒரு வில்லன் கதாபாத்திரத்துக்கு அப்பாவினுடைய வில்லன் கதாபாத்திரங்கள்ல இருந்து ரெபரென்ஸ் எடுத்து வேலை பார்த்திருக்கீங்களா?
அப்பா வரலாறு சார்ந்த கதைகள்ல அதிகமாக நடிச்சிருக்காரு. அப்போ இருக்கிற நடிப்புத் தன்மையை நாம இப்போ பின்பற்றுவது கிடையாது. ஆனால், வரலாறு சார்ந்த கதைகள்ல ஹீரோயிசம் அல்லது வில்லனிசம் கதாபாத்திரங்கள் எனக்கு வந்தால் சந்தேகமே இல்ல. அப்பாவினுடைய நடிப்பையும், உடல்மொழியையும் நான் ஃபாலோ பண்ணுவேன்.

`விருமாண்டி’ திரைப்படத்துல உங்களுடைய கதாபாத்திரத்தோட ஒரு ஸ்டில் இப்போ வரைக்கு பல மீம்ஸ்ல பார்க்க முடியுதே….
(சிரித்துக் கொண்டே) ஆமா. இந்த நடிகர்கூட ஒரு நாள் நடிச்சிடணும்னு நம்ம நினைச்சிருப்போம். அப்படி எனக்கு கமல் சார்கூட நடிக்கணும்னு ஆசை இருந்தது. அப்போ ஒரு மாசத்துல முடிய வேண்டிய படப்பிடிப்பு 8 மாதங்களுக்கு போச்சு. அத்தனை மாதங்கள் கமல் சார்கூட நான் பயணிச்சேன். அப்போ எனக்கு கேமராவுல இடது, வலது பக்கமே தெரியாது. கமல் சார் அப்போ எல்லா விஷயங்களையும் சொல்லிக்கொடுத்தார். இன்னைக்கு எனக்கு எல்லா விஷயங்களும் தெரியுறதுக்கு காரணமே அந்தப் படம்தான். அந்தப் படத்துக்காக முதல்ல சந்திக்கும்போது கமல் சார் என்னுடைய அப்பா பெயரை வச்சு `உண்மையான தேவர் மகனே நீதான் பா!’னு சொன்னாரு. அந்தப் படம் என்னுடைய காரியர்ல இந்தளவுக்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கல. அப்போ இருந்து இப்போ நான் நடிச்சுட்டு இருக்குற படங்கள் வரைக்கும் பல இயக்குநர்கள் `விருமாண்டி’ பார்த்துதான் இந்தக் கதாபாத்திரத்துக்கு உங்களை தேர்ந்தெடுத்தோம்னு சொல்றாங்க!

`செந்தூரபாண்டி’, `பேரரரசு’ படங்கள்ல விஜயகாந்த்கூட சேர்ந்து நடிச்சுருந்தீங்க, அவரை எவ்வளவு மிஸ் பண்றீங்க ?
கிரேட் மனிதர் அவர் ! கிட்டத்தட்ட அவர் எங்க குடும்ப நண்பர் மாதிரிதான். சினிமாவுக்கு வந்ததுக்குப் பிறகு ஒரு முறை வாய்ப்புக் கேட்டு அவருடைய அலுவலகத்துக்குப் போனேன். அவரே அலுவலகத்துல இருந்து வெளில வந்து `நீ ஏன் இங்க வர்ற! நீ யாரோட பையன் தெரியுமா, நீ நடிக்க ஆரம்பிச்சுட்டல்ல… நான் உனக்கு சொல்றேன்’னு சொன்னாரு. நான் வீட்டுக்குப் போறதுக்குள்ள எனக்கு `பெரியண்ணா’ படத்தோட வாய்ப்பு கிடைச்சது. முக்கியமாக, `பேரரசு’ படத்துல என்னை கத்தியால ஒரு காட்சியில குத்த வரணும். அந்தக் காட்சியில் நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டாரு. அந்தக் கட்சியை நான் டூப் போட்டு எடுத்துகிறேன்னு சொன்னாரு. என் மேல அவ்வளவுக்கு அக்கறையாக இருந்தார். உணவு விஷயத்துல மட்டுமில்ல உதவின்னு கேட்டால் முதல்ல வந்து அவர் செய்வாரு!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…