ஏகி கிரண் மராத்திய அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏகி கிரண் மராத்திய அமைப்பு கர்நாடக மாநிலத்தை கூறு போட சதி திட்டம் தீட்டி வருகிறது. இதற்கு மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா கட்சியை சேர்ந்த தலைவர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள். இதன் காரணமாகவே பெலகாவியை மகாராஷ்டிராவுடன் சேர்க்க வேண்டும் என பேசி வருகிறார்கள். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கர்நாடகாவில் ஏகி கிரண் மராத்திய அமைப்புக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். சிவசேனா கட்சியினர் கர்நாடகாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 22-ல் (இன்று) கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த கன்னட கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
எங்களது போராட்டத்துக்கு வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர், தனியார் பேருந்து சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. உணவகங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளனர். கன்னட அமைப்புகளின் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் அனைத்து வகையான வாகன ஓட்டுநர்களும் தங்களது வாகனத்தை இயக்கக்கூடாது. இவ்வாறு வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.