பெங்களூரு,
பெலகாவியில் கடந்த மாதம்(பிப்ரவரி) 21-ந் தேதி மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பஸ் கண்டக்டர் மீது மராட்டிய அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் கர்நாடகம்-மராட்டியம் இடையே மொழி பிரச்சினையாக மாறியது. கர்நாடகத்தில் மராட்டிய மாநில பஸ்களும், மராட்டியத்தில் கர்நாடக அரசு பஸ்களும் தாக்கப்பட்டன. இந்த விவகாரம் இரு மாநிலங்களிடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.
பேச்சுவாா்த்தைக்கு பிறகு இரு மாநிலங்களிடையே இயல்பு நிலை திரும்பியது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் 22-ந் தேதி(இன்று) முழு அடைப்பு நடத்துவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அந்த கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி கர்நாடகத்தில் இன்று(சனிக்கிழமை) முழுஅடைப்பு நடைபெற உள்ளது. இந்த முழு அடைப்புக்கு அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த முழு அடைப்புக்கு கர்நாடக ரக்ஷண வேதிகே(சிவராமே கவுடா அணி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன.
கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், பெங்களூரு மாநகர போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு வழங்கியுள்ளன. ஆனால் பஸ்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் அதிகாரப்பூர்வமாக தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதனால் ஆட்டோக்கள், வாடகை கார்கள் வழக்கம் போல் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி-கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். பல்வேறு வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும். தியேட்டர்களில் ஒரு காட்சியை மட்டும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கன்னட அமைப்பினர் பெங்களூருவில் இன்று ஊர்வலம் நடத்த உள்ளனர்.முழு அடைப்பையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வலுக்கட்டாயமாக கடைகளை மூடும்படி கூறினால் அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.