ஜெருசலேம்: சமீபத்திய காசா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்பு முதல் முறையாக 12-க்கும் அதிகமான ஹிஸ்புல்லாகளின் ஏவுகணைகளையும், ஒரு கட்டளை மையத்தையும் ராக்கெட் வீசித் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்தது. தெற்கு லெபனானில் இருந்து தங்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
முன்னதாக, தீவிரவாத இலக்குகளுக்கு எதிராக வலிமையுடன் செயல்படுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு கட்டளையிட்டதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார். இஸ்ரேல் இரணுவம் கூறுகையில், சனிக்கிழமை காலையில் வடக்கு இஸ்ரேல் நகரமான மெதுலாவில் மூன்று ராக்கெட்டுகள் இடைமறித்து தாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.
இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. இதனிடையே, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக லெபனானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து லெபனானில் உள்ள ஐநா அமைதிக் குழு கூறுகையில், “வன்முறை அதிகரிப்பால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலும், லெபனானும் தங்களின் வாக்குறுதிகளில் உறுதியாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
பலவீனம் ஆன போர் நிறுத்த ஒப்பந்தம்: ஹிஸ்புல்லாகளின் இலக்குகள் என கூறும் இடங்களின் மீது இஸ்ரேல் தினமும் தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லாக்கள் மீண்டும் ஆயுதங்களை தூக்காமல் இருப்பதற்காக இந்த தாக்குதலை நடத்துவதாக அந்நாடு கூறுகிறது. அதேபோல் தெற்கு லெபனானின் ஐந்து இடங்களில் இன்னமும் இஸ்ரேல் படைகள் நிலைகொண்டுள்ளன. இது தங்களின் இறையாண்மையை மீறுவதாகவும், போர் நிறுத்த ஒப்பந்ததத்தை மீறுவதாகவும் உள்ளதென்று லெபனான் அரசு குற்றம்சாட்டுகிறது. இஸ்ரேல் அதன் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் கோருகிறது.
அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் இன்னும் முழுமையாக லெபனான் படைகள் நிலைநிறுத்தப்படவில்லை. அதனால், தங்களின் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு தங்களின் படை அங்கு இருப்பது அவசியமாகிறது என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.