செங்கல்பட்டு ஆட்சியருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை: கருணை அடிப்படையில் பணி வழங்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உதாசீனப்படுத்திய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா ஆனைகுன்றத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்த முனுசாமி கடந்த 2001 ஜூலை 15 அன்று இறந்தார். இதையடுத்து அவரது மகன் ராஜகிரி கருணை அடிப்படையில் வாரிசு வேலை கோரி விண்ணப்பித்தார். 2001 முதல் 2006 வரை கருணை அடிப்படையில் வேலை கோர தடை இருந்ததால், 2006-ம் ஆண்டு தடை நீங்கியதும் மீண்டும் வேலை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அந்த மனு காலதாமதமாக அளிக்கப்பட்டுள்ளது என்றும், அவர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இல்லை என்றும் கூறி அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதையடுத்து ராஜகிரி கருணை அடிப்படையில் வேலை வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாகவும், ஆண்டு குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரம் என்று மதுராந்தம் துணை வட்டாட்சியர் சான்றிதழ் அளித்துள்ளார். ஆகவே மனுதாரருக்கு 3 மாதங்களுக்குள் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டுமென செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 2023 டிச.19 அன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி ராஜகிரி உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக கடந்த பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பி.சுடலையாண்டி, பணி வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் மாவட்ட ஆட்சியர் அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை, என்றார். அதையடுத்து நீதிபதி, இநத வழக்கை வரும் மார்ச் 21-க்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் நீதிமன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்திவிட்டால் அவர் ஆஜராக வேண்டியதில்லை. இல்லையெனில் அவர் நேரில் ஆஜராக வேண்டும், என உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் ஆஜராகவில்லை. உத்தரவும் அமல்படுத்தப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் ஏப்.4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.