உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த முஸ்கான் என்ற பெண் தனது கணவர் செளரப் ரஜபுத்திற்கு தூக்க மாத்திரை கொடுத்து வெட்டி கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னுடைய ஆண் நண்பர் சாஹில் என்பவருடன் சேர்ந்து கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி டிரம் ஒன்றில் போட்டு அடைத்துவிட்டு, சிம்லாவிற்கு சென்றார் முஸ்கான். இருவரும் சிம்லாவில் இருந்து வந்த பிறகு போலீஸில் பிடிபட்டனர். முஸ்கானின் தாயாரே தனது மகளை பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளார். முஸ்கானும், அவரது ஆண் நண்பர் சாஹிலும் சேர்ந்து கொலை செய்துவிட்டு சிம்லாவிற்கு சென்று ஹோலி கொண்டாடிய வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. இருவரும் மகிழ்ச்சியோடு ஹோலி விளையாடியதோடு இருவரும் சேர்ந்து போட்டோவிற்கும் போஸ் கொடுத்துள்ளனர். சிம்லா மட்டுமல்லாது மணாலிக்கும் இருவரும் சென்றுள்ளனர்.

அங்கு சாஹில் பிறந்தநாளை இருவரும் சேர்ந்து கொண்டாடி இருக்கின்றனர். பிறந்தநாள் கேக்கை எடுத்து சாஹிலுக்கு முஸ்கான் ஊட்டி விடுவது போலவும், முத்தமிடுவது போலவும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு அவர்கள் பனிச்சறுக்கில் நடந்து சென்ற வீடியோவும் வெளியாகி இருக்கிறது. போலீஸாரின் விசாரணையில் சாஹில்தான் முஸ்கானுக்கு மதுபழக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. அதோடு சாஹிலுக்கு தேவையான பணத்தை முஸ்கான் தனது கணவர் அனுப்பும் பணத்தில் இருந்து எடுத்து கொடுத்துள்ளார்.
முஸ்கானும், சாஹிலும் மகிழ்ச்சியாக இருந்தபோது முஸ்கான் வீட்டு உரிமையாளர் நேரில் பார்த்துவிட்டார். அவர் இது தொடர்பாக செளரப் ரஜபுத்திடம் தெரிவித்தார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு ரஜபுத் விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அதன் பிறகு குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.

அப்படி இருந்தும் முஸ்கான் சாஹிலுடனான தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து வந்தார். கணவனை கொலை செய்து பல துண்டுகளாக வெட்ட திட்டமிட்டு முன்கூட்டியே இரண்டு கத்தியை வாங்கி வந்துள்ளார். அவர் கடைக்காரரிடம் சிக்கன் வெட்ட தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். செளரப்பை மார்ச் 3ம் தேதி கொலை செய்தனர். அதற்கு முன்பு பிப்ரவரி 25ம் தேதியும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.