தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ்-4 வாகனங்கள் மோசடியாக பதிவா? – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ்-4 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பிஎஸ் – 4 ரக வாகனங்கள் கடந்த 2020 ஏப்ரல் மாதத்துக்குப்பிறகு தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதன்பிறகும் இந்த வாகனங்கள் தடையின்றி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ்காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், “தமிழகத்தில் பிஎஸ் – 4 ரக வாகனங்கள் உள்பட 315 வாகனங்கள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை ஆணையர் விவரம் அளித்துள்ளார். இந்த மிகப்பெரிய மோசடியில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. எனவே இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத் துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் கடந்த 2020 ஏப்ரலுக்குப் பிறகு பிஎஸ் – 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டு இருந்தால் அதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு, விசாரணையை வரும் மார்ச் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.