சென்னை: தொழிலாளர்களுக்கான பிஎஃப் பங்களிப்பு தொகையை 10 ஆண்டுகளாக செலுத்தவில்லை என்பதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், 50 சதவீத தொகையை 4 வார காலத்துக்குள் செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதியை பிடித்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசு கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழக நகராட்சி நிர்வாகத்துறையும் இதுதொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு தொகையாக கடந்த 2011 முதல் 2021-ம் ஆண்டு வரை நகராட்சி நிர்வாகம் ரூ. 1 கோடியே 65 லட்சத்து 78 ஆயிரத்து 444-ஐ செலுத்தாமல் வைத்துள்ளதாகக்கூறி வருங்கால வைப்பு நிதி திருச்சி மண்டல உதவி ஆணையர் கடந்த 2024 நவம்பரில் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
அதன்பிறகும் பிஎஃப் பங்களிப்பு தொகை செலுத்தப்படாததால், திருத்துறைப்பூண்டி நகராட்சியின் வங்கி கணக்கை முடக்கி வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் கடந்த ஜன.30 அன்று உத்தரவிட்டார். இந்த வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து நகராட்சி ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “பிஎஃப் பங்களிப்பு தொகையை செலுத்தவில்லை. இதனால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகத்தின் அன்றாடப் பணிகள் ஸ்தம்பித்துப் போய் உள்ளது,” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வருங்கால வைப்பு நிதிக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மூ.பழனிமுத்து, “தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கணக்கில் நகராட்சியின் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டிய தொகையை 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம் இருந்து வந்துள்ளது,” என்றார்.
அதையடுத்து நீதிபதி, “வருங்கால வைப்பு நிதியில் தனது பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டிய ரூ. 1 கோடியே 65 லட்சத்து 78 ஆயிரத்து 444 ரூபாயில் 50 சதவீதத்தை நகராட்சி நிர்வாகம் 4 வார காலத்துக்குள் செலுத்த வேண்டும். அதன்பிறகு அந்த நகராட்சியின் வங்கி கணக்கு முடக்கத்தை நீக்கி வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் உத்தரவிட வேண்டும்,” எனக் கெடு விதித்து விசாரணையை வரும் ஏப்.15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.