சென்னை: ‘தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுகிறேன்’ என்று தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஆற்றிய வரவேற்புரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுப் பேசினார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுகிறேன். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பதை ஏற்க முடியாது. அவ்வாறு நடந்தால் தமிழகம் 8 முதல் 12 இடங்களை இழக்கும். எண்ணிக்கை தான் அதிகாரம். ஒருவேளை நமக்கான தொகுதிகளை நாம் இழந்தால் சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக இருக்க நேரிடும்.
பல்வேறு மொழிகள், பண்பாடுகள், உடைகள், வழிபாட்டு நம்பிக்கைகள் உள்ளிட்டவை கொண்டதுதான் இந்தியா. அப்படியிருக்க மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால்தான் இந்தியாவின் உண்மையான கூட்டாட்சி உருவாகும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மூலம் கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளது.
மேலும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும். காலம் காலமாக பாதுகாக்கப்படும் நமது சமூக நீதி பாதிக்கப்படும். அதனைத் தடுக்க இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம்.
இவ்விவகாரத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை. குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது அதனாலேயே முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழகம் ஒன்றிணைந்துள்ளது. இதே ஒற்றுமையுடன் இந்த அரங்கில் கூடியுள்ள அனைவரும் செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
‘அபாயத்தில் இருக்கிறோம்’ – தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநிலங்கள் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்துள்ளன. ஆனால் அந்த சாதனைக்காக கவுரவிக்கப்படாமல், அந்த மாநிலங்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளன.
பல பத்தாண்டுகளாகவே நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் பல்வேறு கொள்கைகளை வகுத்து, அதை செயல்படுத்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தேசம் நிலையான மக்கள் தொகை பெருக்கத்தை இலக்காகக் கொண்ட போது அதற்கேற்ப நாம் மாநிலங்களில் மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்தோம். இன்னும் சில மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் அதைக் கட்டுப்படுத்தி ஒரு சாதனையை நாம் செய்துள்ளோம். அதற்காக இப்போது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் சூழலில் உள்ளோம்.” என்று பேசினார்.
‘சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனை’ – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், “ மக்கள் தொகை கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே இந்த தொகுதி மறுவரையறை. பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. அவர்கள் நினைப்பதை செயல்படுத்துகிறார்கள். கட்சி எல்லைகளைக் கடந்து நாம் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்படுவோம்.” என்று கூறினார்.
‘தலைக்கு மேல் தொங்கும் கத்தி’ – கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பே, மத்திய அரசு தொகுதி மறுவரைக்கு அவசரம் காட்டுவது ஏன்? கடந்த முறை நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேரளாவின் மக்கள் தொகை பெருக்கம் 4 சதவீதமாகத்தான் இருந்தது. இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும் விகிதாச்சார அடிப்படையின் அர்த்தம் என்ன?
இந்தத் தொகுதி மறுவரையறை கூட்டாட்சியை மறுக்கிறது. தற்போதைய தொகுதி மறுவரையறை செயல்பாடு வட இந்தியாவுக்கு நன்மைபயக்கும் என்று அறிந்திருப்பதால், மத்திய அரசு இதனை முன்னெடுக்கப் பார்க்கிறது. ஒருபுறம் மக்கள் தொகையை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தியதற்காக தென்மாநிலங்களை மத்திய அரசு பாராட்டுகிறது. ஆனால் மறுபுரம் மக்கள் தொகை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி நமது பங்கினை குறைக்கிறது. தொகுதி மறுவரையறை என்பது நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகும். எந்த ஒரு ஆலோசனையும் நடத்தாமல் பாஜக தொகுதி மறுவரையறையை முன்னெடுக்கிறது.” என்றார்.
பெயர்ப் பலகைகளில் தாய்மொழி – ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ள அனைவரின் முன்னால் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளிலும் அவர்களது பெயர் ஆங்கிலத்திலும், அவரவர் தாய்மொழியிலும் பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் முதல்வர் ஸ்டாலினின் வரவேற்புரையை கூட்டத்தில் பங்கேற்றோர் அவரவர் தாய்மொழியில் கேட்கும் வகையிலும் ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது.
காஞ்சிப் பட்டு முதல் கோவில்பட்டி கடலை மிட்டாய் வரை.. இன்றைய ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ள மூன்று மாநில முதல்வர்கள், கர்நாடக துணை முதல்வர், பிற அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு புவிசார் குறியீடு பெற்ற தமிழகத்தின் காஞ்சிபுரம் பட்டுச் சேலை, பத்தமடை பாய், தோடர்கள் ஷால்வை, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஊட்டி வர்க்கி, ஈரோடு மஞ்சள் மற்று கொடைக்கானல் பூண்டு ஆகியன அடங்கிய பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது.
‘வரலாற்றில் பொறிக்கப்படும்’ – முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தந்த முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை வரவேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாள் இது. இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.