சென்னை: மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில், கேரளா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய 3 மாநில முதல்வர்கள், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்தால், தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, நாடாளுமன்றத்தில் மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று மத்திய அரசுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இவ்வாறு பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் எம்.பி.க்கள் அடங்கிய கூட்டுக் குழு அமைக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 5-ம் தேதி நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, அமைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், சென்னை கிண்டியில் உள்ளநட்சத்திர ஓட்டலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க 7 மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், பிரதான அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று, நேற்று காலையே கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வந்துவிட்டார். நேற்று மாலை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் வந்துவிட்டனர். கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் இன்று காலை வருகிறார். இவர்கள் தவிர, கேரள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினாய் விஸ்வம், பஞ்சாபின் சிரோமணி அகாலிதளத்தை சேர்ந்த இருவர், ஒடிசாவின் பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த சஞ்சய் குமார் தாஸ் பர்மா, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவின் நிர்வாகியான உதய் சீனிவாஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மிதுன்ரெட்டி, தெலங்கானாவின் பிஆர்எஸ் நிர்வாகி பி.வினோத் குமார் உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட இதர மாநிலங்களை சேர்ந்த கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இதையொட்டி முதல்வர் ஸ்டாலின்,சமூக வலைதளத்தில் வெளியிட்ட காணொலி உரையில் கூறியதாவது: ஃபேர் டீ-லிமிட்டேஷன், இதுதான் இப்போது பேசுபொருளாக இருக்கிறது.தொகுதி மறுவரையறை என்பது எம்.பி.க்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்சினை மட்டும் கிடையாது; மாநில உரிமை சார்ந்த பிரச்சினை. அதனால்தான் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினோம். பாஜக தவிர, மற்ற அனைத்து கட்சியினரும் ஓரணியில் நின்று நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்பட உள்ள மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநில முதல்வர்கள், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இருக்கும் அந்த மாநிலங்களைச் சார்ந்த அனைத்து கட்சிகளின் தலைமைக்கும் நான் கடிதம் எழுதினேன்.
மக்கள்தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தண்டனை கொடுத்துவிடக் கூடாது. அதனால்தான், தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான கட்சிகளின் ஒருங்கிணைந்த சிந்தனைப்படி, மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கும் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நமது நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும். நமது இந்த முன்னெடுப்பு, இந்தியாவை காக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.