தோனி எந்த இடத்தில் இறங்குவார்…? ருதுராஜ் கெய்க்வாட் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

IPL 2025 CSK vs MI: ஐபிஎல் 2025 தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டியாக இன்று கொல்கத்தாவில் கேகேஆர் – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. அதேபோல், நாளை ஹைதராபாத் நகரில் எஸ்ஆர்ஹெச் – ஆர்ஆர் அணிகள் மாலை 3.30 மணிக்கு மோதுகின்றன.

CSK vs MI: 15 நாள்களுக்கு மேலாக பயிற்சி

அதை தொடர்ந்து, நாளை மாலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன. சிஎஸ்கே அணி வீரர்கள் கடந்த 15 நாள்களுக்கு மேலாக சென்னையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிஎஸ்கே அணி அதன் முதலிரண்டு போட்டிகளை சென்னையிலேயே விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

CSK vs MI: கேப்டன்கள் செய்தியாளர் சந்திப்பு

இதையடுத்து முதல் போட்டியை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று முன்தினம் இரவே சென்னைக்கு வந்துசேர்ந்துவிட்டது. இந்நிலையில், நேற்றும் இன்றும் இரு அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இன்று இரு அணிகளின் கேப்டன்களும் தனித்தனியே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

CSK vs MI: இம்பாக்ட் வீரரா எம்எஸ் தோனி? 

அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம், “தோனியின் உடற்தகுதியை பற்றி சொல்லுங்கள். அவரை ‘இம்பாக்ட் வீரராக’ பயன்படுத்த வாய்ப்பிருக்கிறதா?” என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு ருதுராஜ்,”அவர் ஏற்கனவே ‘இம்பாக்ட் வீரர்’ தான். அவரை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அத்தனை வீரர்களும் உத்வேகம் பெறுகிறோம். அவர் பந்துகளை கனெக்ட் செய்து அடிக்கும் அளவுக்கு, எங்களால் கூட அடிக்க முடியவில்லை. 43 வயதில் அணிக்காக அவர் செய்து வரும் பணிகள் பாராட்டுக்குரியது. அவர் அணிக்காக செய்யும் பணியை அப்படியே தொடர்ந்து செய்வார். மேலும் தோனி தனது பயிற்சியில் மிகவும் தீவிரமாக உள்ளார், எவ்வளவு அதிகமாக சிக்ஸர்கள் அடிக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறார். அவரை உடல்நிலை குறைந்ததாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை” என்றார்.

CSK vs MI: தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு இருக்கா?

தொடர்ந்து பேசிய அவர்,”நிலைமை எங்களுக்கேற்ப இருந்தால், எதிரணிக்கு இது பெரிய சவாலாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த ஆடுகளத்தின் நிலையைப் பொறுத்து மட்டுமே நாம் முடிவு செய்யலாம். அது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் இந்த ஆண்டின் பந்துவீச்சுத் தாக்குதல் எதிரணிக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்” என்றார். 

தமிழ்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு ? “அணிக்கு சிறந்தது என்ன, எந்த இணை சிறப்பாக இருக்கும் என்பதைத்தான் முதலில் பார்க்க வேண்டும். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அது முக்கியமல்ல” என்றார்.

CSK vs MI: ருதுராஜ் உடன் வேறு ஓப்பனர் யார்…? 

ரச்சின் ரவீந்திரா ஓப்பனராக விளையாடுவாரா? உங்களுடன் தொடக்க வீரராக இறங்கப்போவது யார்? என்ற கேள்விக்கு,”அது முடிவாகிவிட்டது, ஆனால் இங்கே தெரிவிக்க இயலாது. தொடக்க வீரர்களின் இணை முந்தைய ஆட்டங்களை போன்று இருக்கும். எங்கள் அணியில் அனைவரும் முதல் மூன்று இடங்களில் ஆடக்கூடியவர்கள். ரச்சின் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ராகுல் திரிபாதியும் திறன்மிக்க வீரர். எங்களுக்கு நிறைய ஆப்சன்கள் இருக்கிறது. இது நல்ல தலைவலிதான். நாங்கள் எடுத்த முடிவை நாளை நீங்கள் அறிவீர்கள்.

அவர் (ரச்சின்) நல்ல உடல் நிலையில் இருக்கிறார். ஏலத்தில் நாங்கள் சரியான பந்துவீச்சாளர்களை  backup தேர்ந்தெடுத்துள்ளோம். பதிரானா அணியில் இருப்பது நன்றாக உள்ளது” என்றார். இதன்மூலம், டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் ஓப்பனிங்கிலும் ரச்சின் நம்பர் 3 மற்றும் திரிபாதி நம்பர் 4இல் இறங்குவார்கள் எனலாம். அதேநேரத்தில் சாம் கரனை பிளேயிங் லெவனில் வைக்கும் வாய்ப்பும் குறைவுதான் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | CSK vs MI IPL Ceremony: சேப்பாக்கத்தில் தொடக்க விழா.. பங்கேற்கும் ராக்ஸ்டார்!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.