நாக்பூர் கலவர சேதங்களுக்கு வன்முறையாளர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்படும்: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

நாக்பூர்: நாக்பூர் கலவரத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு வன்முறையாளர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மகாராஷ்டிராவில் அவுரங்சீப் கல்லறை தொடர்பாக இந்துத்துவா அமைப்பினர் கடந்த திங்கட்கிழமை நாக்பூரில் போராட்டம் நடத்தினர். அப்போது மத நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதை தொடர்ந்து இரு சமூகத்தினர் இடையே கலவரம் வெடித்தது. இதில் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் இக்கலவரம் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாக்பூர் கலவரத்தில் 33 போலீஸார் உட்பட 40 பேர் காயம் அடைந்துள்ளனர். பல்தல்புராவில் பெண் காவலர்கள் கல்வீசி தாக்கப்பட்டனர். அவர்களை மானபங்கம் செய்யும் முயற்சி எதுவும் நடைபெறவில்லை.

கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதில் இதுவரை 104 வன்முறையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 12 சிறார்கள் உட்பட 92 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கலவரத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு வன்முறையாளர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்படும். இழப்பீடு செலுத்த தவறுவோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டபடி வரும் 30-ம் தேி நாக்பூர் வருகிறார். சமீபத்திய கலவரத்தால் அவரது பயணம் தடைபடாது.

காவல் துறையினரை தாக்கியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கலவரத்தில் வெளிநாட்டு சக்திகளின் பங்கு குறித்து இப்போதைக்கு எதுவும் கூறமுடியாது. மேலும் இதில் எந்த அரசியல் கோணமும் இல்லை. உளவுத் துறையின் தோல்வி என்றும் கூறமுடியாது. இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

ஒருவர் உயிரிழப்பு: இதற்கிடையில் நாக்பூர் கலவரத்தில் காயம் அடைந்த இர்பான் அன்சாரி (38) என்ற வெல்டர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கலவரத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.