மும்பை: நாக்பூர் வன்முறையின்போது சேதமடைந்த சொத்துகளுக்கான தொகை முழுவதும் வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பட்னாவிஸ், “நாக்பூர் வன்முறையின்போது பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோக்களை ஆராய்ந்து இதுவரை வன்முறை தொடர்பாக 104 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 12 சிறார்கள் உட்பட 92 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையால் பிரதமர் நரேந்திர மோடியின் மும்பை வருகை திட்டத்தில் பாதிப்பு ஏதும் இருக்காது.
நாக்பூர் வன்முறையின் போது சேதமான சொத்துகளுக்கான தொகை முழுவதும் வன்முறையில் ஈடுபட்டவர்களிடமிருந்து வசூலிக்கப்படும். அதைச் செலுத்தத் தவறினால் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்து விற்பனை செய்யப்பட்டு, அந்தத் தொகை பெறப்படும். காவல் துறையினரைத் தாக்கிய கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வரை எனது அரசு ஓயாது.
இந்த வன்முறை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் வெளிநாட்டவர் அல்லது வங்கதேசத்தவர் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை. உளவுத் துறையின் தோல்வியால் இது நடந்தது என்று கூறிவிட முடியாது. ஆனாலும் உளவுத் துறை இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். பெண் காவலர் மீது கலவரக்காரர்கள் கற்களை வீசி உள்ளார்கள். ஆனால், துன்புறுத்தப்படவில்லை. இந்த வன்முறைக்கு எந்தவிதமான அரசியல் கோணமும் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும் 14 பேர் கைது: இதனிடையே, நாக்பூர் வன்முறைத் தொடர்பாக மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் இதுவரை கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது என்றும் போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து நாக்பூர் காவல் ஆணையர் ரவிந்தர் குமார் சிங்கால் கூறுகையில், “நாக்பூர் வன்முறை தொடர்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேலும்14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை தொடர்பாக மேலும் மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன” என்றார். மேலும், “உயர் மட்ட அளவிலான ஆய்வுக்குப் பின்பு நகரின் சில பகுதிகளில் இருந்து ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, முகலாய அரசர் அவுரங்கசீப் சமாதியை இடமாற்றம் செய்வது தொடர்பாக நாக்பூரில் இரு சமூகத்தினரிடையே திங்கள்கிழமை வன்முறை மூண்டது. இதில், 33 காவல் துறை அதிகாரிகள் உட்பட 38 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த கலவரத்தில் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும். நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டன.