’நான் மாடர்ன் பொண்ணு, அழுமூஞ்சி கிடையாது, அப்படி நடிக்க பிடிக்கல’ – நடிகை அஸ்வினி ஓப்பன் டாக்!

”நான் கன்னடப்பொண்ணு. ஆனா, பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பையிலதான். அப்பா அங்க பிசினஸ் பண்ணிட்டிருந்தாரு. நான் பி.எஸ்சி முடிச்சுட்டு வேலைக்கு ட்ரை பண்ணிட்டிருந்தேன். அப்ப பெங்களூர்ல எனக்கு இன்டர்வியூ வந்துச்சு. அந்த இன்டர்வியூவை முடிச்சுட்டு நான் வெளிய வந்து ஆட்டோவுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போ என்னை கிராஸ் பண்ணி ஒரு கார் போச்சு. அந்த கார் மறுபடியும் ரிவர்ஸ்ல வந்து என் பக்கத்துல நின்னுச்சு. அதுக்குள்ள இருந்து இறங்கின ஒருத்தர், ’மேம், சார் காருக்குள்ள உட்கார்ந்திருக்கார். உங்க கிட்ட பேசணும்னு சொல்றார். வாங்க’ன்னு கூப்பிட்டார். நான் ரொம்ப பயந்துட்டேன். வரமாட்டேன்னு சொல்லிட்டேன். அப்புறம் காருக்குள்ள இருந்து அவரே இறங்கி வந்தார். அவர் கன்னடத்துல ஒரு புரொடியூசர். பக்கத்து சுவர்ல இருந்த போஸ்டரை காட்டி ’அந்த படத்தோட புரொடியூசர் நான்தான்மா அப்படின்னு சொல்லிட்டு அவரோட விசிட்டிங் கார்டை என் கையில கொடுத்து வீட்ல இருந்து பெரியவங்களை கூட்டிக்கிட்டு இந்த அட்ரஸ்க்கு வாம்மா’ அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

நடிகை அஸ்வினி

நானும் மறுநாள் அப்பாவோட அந்த அட்ரஸ்க்கு போனேன். படம் பேரு ஹேமாவதி. உங்க கேரக்டர் பேரும் ஹேமாவதி அப்படின்னு சொன்னவுடனே ’முதல் படமே டைட்டில் ரோல். நடிக்கலாம்’னு தோணுச்சு. அப்பாவும் ’உனக்கு ஓகேன்னா எங்களுக்கு ஓகே’ன்னு சொல்லிட்டார். ஆனா, படம் ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் ஐயோன்னு ஆயிடுச்சு. அது ஒரு சாதி சண்டை படம். படம் முழுக்க நான் அழுதுகிட்டே இருக்கணும். எல்லாரும் சினிமாவுக்கு வந்தா மேக்கப் போட்டு அழகா ஆயிடுவாங்க. ஆனா, எனக்கு அந்தப் படத்துல டார்க் மேக்கப் போட்டு, தலை நிறைய எண்ணெய் வச்சு, கண்ணுல கிளிசரின் தடவி, அய்யய்யோ அத இப்ப நினைச்சாலும் எனக்குப் பிடிக்கவே இல்ல. நான் எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கிற கேரக்டர். ஆனா, என்ன பண்றது, மாட்டியாச்சு. இந்தப் படத்தை முடிச்சு குடுத்துட்டு போவோம்னு நடிச்சேன். படம் ஃபிளாப். உடனே என்ன அன்லக்கி ஆக்டர்னு சொல்லிட்டாங்க. ஆனா, நான் அத பத்தி எல்லாம் கவலைப்படல.

அடுத்தப் படம் சாவித்திரி. அதுல கொஞ்சமா அழற கேரக்டர். அந்தப் படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே பிரைவேட் ஸ்கிரீனிங் போட்டு பார்த்துட்டு மகேந்திரன் சார் என்னை ’உதிரிப்பூக்கள்’ படத்துக்கு செலக்ட் செஞ்சார். அவங்க ஓர் அன்லக்கி ஆக்டர்னு சிலர் சொல்லி இருக்காங்க. ஆனா, என் படத்தோட ஹீரோயின் இவங்கதான்னு மகேந்திரன் சார் முடிவு பண்ணிட்டார்.’’ – யெஸ், நீங்க படிக்க ஆரம்பிச்சிருக்கிறது உதிரிப்பூக்கள் அஸ்வினியோட இன்டர்வியூதான்.

நடிகை அஸ்வினி

’’உதிரிப்பூக்கள் 1979-ல் வெளிவந்துச்சு. படம் செம்ம ஹிட். நான் ஷூட்டிங் முடிஞ்சவுடனே மும்பைக்கு போயிட்டேன். சாரு அண்ணா எனக்கு போன் பண்ணி ’உன்னோட நடிப்பை எல்லாரும் பாராட்டுறாங்க. நீ சென்னைக்கு வா’ன்னாரு. அந்தப் படத்தை சென்னைக்கு வந்து தியேட்டர்ல பார்த்தேன். ரசிகர்கள் என்னோட நடிப்பை பாராட்டினதை கேட்டப்போ ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு.

இரண்டாவது படம் பாக்யராஜ்கூட ஒரு கை ஓசை. படத்தோட கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால உடனே ஓகே சொன்னேன். என்னோட ஒரிஜினல் கேரக்டருக்கு ஏத்த மாதிரியே நல்ல சிரிச்ச முகமா நடிச்சேன். அடுத்த படம் மகேந்திரன் சாரோட நண்டு.

நடிகை அஸ்வினி

நண்டு படம் முடிஞ்சவுடனே எனக்கும் ரங்காவுக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. ரங்கா கன்னடத்துலயும் ஹிந்தியிலயும் படங்கள் டைரக்ட் பண்ணியிருக்கார். அதுக்காக அவர் நேஷனல் அவார்ட்கூட வாங்கியிருக்கார். என்னோட ரெண்டாவது படம் டைரக்டர் அவர்தான். எங்களோடது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம்னுதான் சொல்வேன். அவர் அந்த அளவுக்கு என் மேல கேரிங்கா இருந்தார். எங்களுக்கு ஒரு மகள் பிறந்தா. அவ பிறந்ததுக்கு அப்புறம் என்னோட உலகமே அவதான்னு இருக்க ஆரம்பிச்சேன்’’ என்கிற நடிகை அஸ்வினி, ‘இந்திரா’ படத்தில் நடித்ததைப் பற்றி பகிர ஆரம்பித்தார்.

’’நண்டு படத்துக்கு அப்புறம் 14 வருஷம் கழிச்சு சுஹாசினி என் கணவர் ரங்காவுக்கு போன் பண்ணி இந்திரா படத்துல நடிக்க கூப்பிட்டாங்க. அது ரொம்ப நல்ல கேரக்டர்னு மறுபடியும் நடிக்க வந்தேன். ஆனா, மனசெல்லாம் பொண்ணு மேலேயே இருந்துச்சு. நமக்கு பொண்ணை விட்டுட்டு நடிக்க வர்றதெல்லாம் செட்டாகாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்திராவுக்கு அப்புறம் பெரிய பெரிய பேனர்கள்ல இருந்தெல்லாம் வாய்ப்புகள் வந்துச்சு. நான் நோ சொல்லிட்டேன்’’ என்கிற அஸ்வினி, கடந்த ஐந்தாறு வருடங்களாக மேத்ஸ் டியூஷன் எடுத்து வருகிறார்.

நடிகை அஸ்வினி

’’எனக்கு மேத்ஸ் நல்லா வரும். மகளுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டிருந்தேன். அப்படியே டியூஷனும் எடுக்க ஆரம்பிச்சேன். என்னோட ஸ்டூடண்ட்ஸ்க்கு என்னை ரொம்ப பிடிக்கும். நான் திட்ட மாட்டேன், அடிக்க மாட்டேன். சிரிச்சுக்கிட்டே தான் சொல்லிக் கொடுப்பேன். இப்போ பேரன் கூடவும் வாழ்க்கை ஹேப்பியா போகுது’’ என்பவரிடம், மறுபடியும் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என்றால், நல்ல கதை கிடைச்சா பார்க்கலாம் என்கிறார், உதிரிப்பூக்கள் நாயகி அஸ்வினி.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.