வாஷிங்டன்: அமெரிக்க நீதிபதிகளை விமர்சனம் செய்வோருக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தாராளமாக நிதியுதவி வழங்கி வருகிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். அப்போது ட்ரம்ப் உடனான ரகசிய தொடர்பு குறித்து ஆபாச நடிகை ஸ்டார்மி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்த விவகாரத்தை மூடி மறைக்க ட்ரம்ப் தனது வழக்கறிஞர் மூலம் நடிகை ஸ்டார்மிக்கு ரூ.1 கோடியை வழங்கினார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நடுவர் நீதிமன்றம் கடந்த ஜனவரியில் தீர்ப்பு வழங்கியது. அப்போது ட்ரம்ப் குற்றவாளிதான். எனினும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு அபராதமோ, தண்டனையோ விதிக்க விரும்பவில்லை” என்று தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜுன் மெர்சனுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதோடு, அதிபர் ட்ரம்ப் எடுக்கும் முடிவுகளை தடுக்கும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்கும் நீதிபதிகளுக்கு எதிராகவும் சமூக வலைதளங்கள் வாயிலாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நீதிபதிகளின் வீடுகளுக்கு மர்ம பார்சல்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு எதிராக கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் அதிபர் ட்ரம்புக்கு எதிரான நீதிபதிகளை விமர்சிக்கும் நபர்கள், குழுக்களுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தாராளமாக நிதியுதவி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை அவர் ரூ.5.41 லட்சத்தை வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. நீதிபதிகளுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்கும் நபர்களுக்கு தலா ரூ.8,600-ஐ எலான் மஸ்க் வழங்கி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ட்ரம்ப் எச்சரிக்கை: இதனிடையே அமெரிக்கா முழுவதும் சாலை, வீதிகளில் நிறுத்தப்பட்டு இருக்கும் எலான் மஸ்கின் டெஸ்லா கார்களை, மர்ம நபர்கள் சேதப்படுத்தி வருகின்றனர். இதற்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “டெஸ்லா கார்களை சேதப்படுத்துவது தீவிரவாத செயலுக்கு ஒப்பானது. இந்த கார்களை சேதப்படுத்துவோரை எல்-சல்வடார் நாட்டின் சிறைக்கு அனுப்புவேன்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.