ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் உலகம் முழுவதும் ‘புவி நேரம்’ நிகழ்வு நடத்தப்படுகிறது. அந்நாளில் ஒரு மணி நேரத்திற்கு அத்தியாவசியமற்ற மின் விளக்குகளை அணைத்து, காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆதரவை உலக நாடுகள் வெளிப்படுத்துகின்றன. கடந்த 2007-ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக வனவிலங்கு நிதியம் (WWF) சிட்னி, அமைப்பு விளக்குகளை அணைத்து புவி நேரம் நிகழ்வை முதல் முதலாக தொடங்கியது.
இவ்வாறு சுற்றுச்சூழலுக்கான மிகப்பெரிய உலகளாவிய இயக்கமாக கருதப்படும் புவி நேரம் நிகழ்வின் 19வது பதிப்பானது, ஐ.நா. அவையின் உலக நீர் தினத்துடன் இணைந்து, இன்று (மார்ச் 22) இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் உலக வனவிலங்கு நிதியம் (WWF) இந்தியா அமைப்பு, ஏற்பாடு செய்துள்ள ’புவி நேரம் 2025’ நிகழ்வு பிரச்சாரத்தில் நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான தியா மிர்சா, இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா, ரன்வீர் பிரார், சுதர்சன் பட்நாயக், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத ஆனந்த் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
உலக வனவிலங்கு நிதியத்தின் சிறப்பு தூதர்கள் புவி நேர நிகழ்வில் பங்கேற்பதுடன், #BeWaterWise என்கிற கருத்தாக்கத்தில் தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றனர்.
100 கோடிக்கும் அதிமான மக்கள் தொகை கொண்ட இந்தியா, உலக நன்னீரில் 4% மட்டுமே பகிர்ந்து கொள்கிறது. மேலும், கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள ஈரநிலங்கள் பல அவற்றின் இருப்பை இழந்துள்ளன; 40% நீர்நிலைகள், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான தரத்தை இழந்துவிட்டன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதில் பனியாறுகள் கோடிக்கணக்கான மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. எனவே, காலநிலை மாற்றத்தினால் பனிப்பாறைகள் உருகுவதையும், நீர் பாதுகாப்பை மேம்படுத்தும் கருத்துகளும் இந்நாளில் இடம்பெறும்.
நிகழ்வு குறித்து தியா மிர்சா கூறும்போது, “ புவி நேர நிகழ்வுடன் உலக நீர் நாளும் இணைந்து கொண்டாப்படுவது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. காலநிலை மாற்ற விளைவுகள் உலக நீர் வளத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.அந்தவகையில் நீரைப் பாதுகாக்கும் இப்பிரச்சாரத்தில் நானும் ஒரு சிறு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி” என்றார்.