‘மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு பாஜக அபராதம் விதிக்கிறது’ – ரேவந்த் ரெட்டி

சென்னை: “மக்கள் தொகையை தென்மாநிலங்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியற்காக பாஜக அபராதம் விதிக்கிறது.” என்று தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சாடியுள்ளார்.

சென்னையில் இன்று நடந்த தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்களுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டியதற்காக நான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாடு இன்று மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. பாஜக மக்கள் தொகை அபராதக் கொள்கையை அமல்படுத்த நினைக்கிறது. இந்த தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்மாநிலங்கள், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் ஒன்றாக இணைந்து நிற்கின்றன.

கடந்த 1976-ம் ஆண்டு நாடு குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பியது. அதனைத் தென்மாநிலங்கள் எல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்திக்காட்டின. வட இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்கள் அதில் தோல்வியைத் தழுவின.

அதேபோல் தென்மாநிலங்கள் வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைந்தது. அதிக ஜிடிபி, அதிக தனிநபர் வருமானம், வேலைவாய்ப்புகள் உருவாக்கம், சிறந்த உள்கட்டமைப்பு மேம்பாடு, சிறந்த நிர்வாகம் மற்றும் சிறப்பான சமூக நலன் என அடைந்து கவர்ந்திழுக்கும் தெற்காக மாறியுள்ளது.

நீங்கள் மக்களவை தொகுதிகளை அதிகரிக்க வேண்டாம்.தொகுதி மறுவரையறையை மாநிலங்களுக்குள் மேற்கொள்ளுங்கள். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை தெற்கு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அப்படி நடந்தால் வடக்கு மாநிலங்கள் நம்மை இரண்டாம் பட்சமாக மாற்றும்.

விகிதாச்சாரம் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது எங்களை அரசியல் ரீதியாக பாதிக்கும். இல்லையென்றால் முன்னாள் முதல்வர் வாஜ்பாய் கொள்கையை பின்பற்றுங்கள். இந்த மறுவரையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளாதீர்கள்.

தற்போது மக்களவையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 24 சதவீதம். தொகுதி மறுவரையை நடத்தியே தீர்வது என்று மத்திய அரசு விரும்பினால் மொத்தமுள்ள ஐந்து தென்மாநிலங்களுக்கான மக்களவைப் பிரதிநிதித்துவத்தை 30 சதவீதமாக உயர்த்துங்கள். இவ்வாறு ரேவந்த் ரெட்டி பேசினார்.

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில், கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ், பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் தாஸ் புர்மா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.