புவனேஸ்வர்: மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது என தெரிவித்துள்ள பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும் ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக், இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மத்திய அரசு விரிவான ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள நவீன் பட்நாயக் அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ளாத அவர், காணொளி மூலம் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவும், நிலைப்படுத்தவும் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களில் வாழும் மக்களின் ஜனநாயக பிரதிநிதித்துவத்தையும் உரிமைகளையும் உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான கூட்டம் இது.
மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது நமது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான தேசிய திட்டமாகும். மாநிலங்களின் பங்களிப்பு காரணமாக இந்த தேசிய திட்டம் பரவலாக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு பல ஆண்டுகளாக அதிக முன்னுரிமை அளித்தது. மாநிலங்களும் தங்கள் சொந்த முயற்சிகளை எடுத்து தேசிய திட்டத்தை தங்கள் மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தின.
கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகியவை மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில், சிறப்பாக செயல்பட்டுள்ளன. தேசிய திட்டத்தை செயல்படுத்துவதில் கடுமையாக உழைத்துள்ளன. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் இந்த மாநிலங்கள் சாதித்திருக்காவிட்டால், இந்தியாவில் மக்கள் தொகை வெடிப்பு ஏற்பட்டிருக்கும். இது நமது நாட்டின் முன்னேற்றத்தைத் தடம் புரளச் செய்திருக்கும்.
மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது. ஒடிசா மக்களின் நலன்களைப் பாதுகாக்க பிஜு ஜனதா தளம் எல்லாவற்றையும் செய்யும். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மத்திய அரசு விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டு சந்தேகங்களைப் போக்க வேண்டும். இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.