IPL 2025, KKR vs RCB: 18வது ஐபிஎல் சீசன் தொடர் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்று ஆர்சிபி அணியில் புவனேஷ்வர் குமார் விளையாடவில்லை. ஜோஷ் ஹேஸல்வுட், யஷ் தயாள், ரஷிக் சலாம், குர்னால் பாண்டியா, சுயாஷ் சர்மா ஆகிய 5 பந்துவீச்சாளர்களுடன் ஆர்சிபி களமிறங்கியது.
KKR vs RCB: பவர்பிளேவில் சீறிய ரஹானே
முதல் 3 ஓவரில் 9 ரன்களை மட்டும் அடித்து கொல்கத்தா 1 விக்கெட்டை இழந்திருந்தது. டி காக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே அசுர வேகத்தில் விளையாடி அரைசதம் அடித்து மிரட்டினார். 10 ஓவர்களில் 107 ரன்களை கொல்கத்தா அடித்திருந்தது. அந்த நேரத்தில், நரைன் 44(26), ரஹானே 56(31) அடித்திருந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த கட்டத்தில் ரஷிக் சலா 3 ஓவர்களை வீசி 35 ரன்களை கொடுத்து நரைன் விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். ரஹானே விக்கெட்டை 11வது ஓவரில் குர்னால் பாண்டியா கைப்பற்றினார்.
KKR vs RCB: குர்னால் பாண்டியா மிரட்டல்
அடுத்து குர்னால் பாண்டியா வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங்கை விக்கெட் எடுக்க, ரஸ்ஸல் விக்கெட்டை சுயாஷ் சர்மா கைப்பற்றினார். கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி 29 ரன்களை மட்டும் கொடுக்க கேகேஆர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 174 ரன்கள் எடுத்தது. குர்னால் பாண்டியா 3 விக்கெட்டுகள், ஹேஸல்வுட் 2 விக்கெட்டுகள், யஷ் தயாள், ரஷிக் சலாம், சுயாஷ் சர்மா 1 விக்கெட்டை வீழ்த்தினார். நடுவே லியம் லிவிங்ஸ்டன் 2 ஓவர்களை வீசி 14 ரன்களை மட்டும் கொடுத்து சற்று கைக்கொடுத்தார்.
KKR vs RCB: சால்ட் – கோலி மிரட்டல் அடி
175 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி சுலபமாக அடித்தது எனலாம். பில் சால்ட் – விராட் கோலி அதிரடியில் பவர்பிளேவிலேயே விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் வந்தது. பவர்பிளேவில் வைபவ் அரோரா, ஸ்பென்சர் ஜான்சன், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் அதிக ரன்களை கொடுத்தனர். தொடர்ந்து, பில் சால்ட் 31 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்கள் எடுத்து வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். படிக்கல் 10 பந்துகளில் 10 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
KKR vs RCB: கோலி அரைசதம்
விராட் கோலி அரைசதம் அடித்து அசத்த, களம் புகுந்த கேப்டன் ரஜத் பட்டிதார் சுனில் நரைன் பந்துவீச்சில் அடித்த அந்த ஒரு சிக்ஸர் கண்களுக்கு விருந்தளித்தது. ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சையும் சிதறடித்தார். அவரும் 16 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 34 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 5 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 15 ரன்கள் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். விராட் கோலியும் 36 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆட்ட நாயகன் குர்னால் பாண்டியா
இதன்மூலம், 22 பந்துகளை மிச்சம் வைத்து ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் உள்ளிட்டோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆர்சிபியின் ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.