லண்டன்,
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஹீத்ரோ விமான நிலையம் அமைந்துள்ளது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களுள் இதுவும் ஒன்று. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்தநிலையில் விமான நிலையம் அருகே உள்ள ஒரு துணை மின்நிலையம் திடீரென தீப்பிடித்தது. மளமளவென மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியதால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அவர்களது பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முன்னதாக இந்த தீ விபத்தால் ஹீத்ரோ நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது.அதேபோல் ஹீத்ரோ விமான நிலையத்திலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் டிக்கெட் எடுப்பது, ஆவணங்களை சோதனை செய்வதில் சிக்கல் நிலவியது. எனவே அந்த விமான நிலையம் மூடப்பட்டது.
இதன் காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்துக்கு வர வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல் அங்கிருந்து புறப்படும் விமானங்களும் பல மணி நேரம் தாமதமாக சென்றன. அந்தவகையில் சுமார் 1,350 விமானங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் அவதியடைந்தனர். மின் இணைப்பை சரி செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இந்த நிலையில், 18 மணி நேரத்துக்கு பிறகு ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவை தொடங்கியுள்ளது.