ஸ்டாலின் கூட்டிய தொகுதி மறுவரையறை ஜேஏசி கூட்டத்துக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஆதரவு!

ராஞ்சி: மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்வது நியாயமாகவும் சமமாகவும் இருக்காது என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமாராவ், பிஜு ஜனதா தள கட்சியின் சஞ்சய் குமார் தாஸ் பர்மா, பிஜு ஜனதா தள கட்சியின் அமர் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், பிஜு ஜனதா தள கட்சியின் தலைவரும் ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.

சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்துக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தொகுதி மறுவரையறை தொடர்பான பிரச்சினையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை நான் வரவேற்கிறேன். மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்வது நியாயமாகவும் சமமாகவும் இருக்காது” என தெரிவித்துள்ளார்.

ஹேமந்த் சோரனின் இந்தப் பதிவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “நியாயமான தொகுதி மறுவரையறை தொடர்பான தமிழ்நாட்டின் முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளதற்கு நன்றி. இந்த நியாயமான மற்றும் ஜனநாயகபூர்வமான கோரிக்கையை ஆதரிப்பதன் மூலம், தெற்கு மற்றும் சமத்துவத்தை விரும்பும் அனைத்து மாநிலங்களுடனும் நீங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் நிலைப்பாடு கூட்டாட்சியின் உண்மையான உணர்வை நிலைநிறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.