பெங்களூரு: கர்நாடக அமைச்சர் ராஜண்ணா ‘ஹனி டிராப்’ செய்யப்பட்டதாக புகார் தெரிவித்தது குறித்து விசாரிக்க கோரி பேரவையில் அமளியில் ஈடுபட்ட 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று காலையில் அவை கூடியதும் கூட்டுறவு துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா பேசியதாவது: கர்நாடக எம்எல்ஏக்கள் சிலர் தங்களது அரசியல் எதிரிகளைபழிவாங்க பெண்களை வைத்து ‘ஹனி டிராப்’ சதி செய்கின்றனர். இந்த சதி வலையில் என்னையும் சிக்க வைக்க முயற்சித்தனர். என்னைப்போல 48 எம்எல்ஏக்களை இலக்கு வைத்து ‘ஹனி டிராப்’ சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை குறிவைத்தும் இந்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 48 எம்எல்ஏக்களை சம்பந்தப்பட்ட பெண்கள் நெருங்கி புகைப்படம், வீடியோஎடுக்க முயற்சித்துள்ளனர். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா (பாஜக), ‘‘அமைச்சர்களுக்கே பாதுகாப்பு இல்லை. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் என்று கூறி, எங்கள் மீது சேற்றை வாரி பூசுவதை ஏற்க முடியாது. முதல்வர் பதவியை காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸார்கூட இதை செய்திருக்கலாம். எனவே, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்’’ என்றார்.
அதற்கு முதல்வர் சித்தராமையா, ‘‘ஆதாரமின்றி கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டியது இல்லை’’ என்றார். இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் அஸ்வத் நாராயண், முனிரத்னா, தீரஜ் முனிராஜ், சந்துரு லமானி உள்ளிட்ட 18 பேர் சட்டப்பேரவை தலைவர் யு.டி.காதர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். பட்ஜெட் அறிக்கையை கிழித்து அவர் மீது வீசினர். ‘ஹனி டிராப்’ விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், அவையின் மாண்பை கெடுக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக 18 பாஜக எம்எல்ஏக்களையும் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக பேரவை தலைவர் காதர் அறிவித்தார். அவர்களை பேரவை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, மஜத எம்எல்ஏக்கள்
கோஷமிட்டதால் அவையில் கடும் அமளி நிலவியது.