சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) அடுத்தக் கூட்டம் ஹைதராபாத்தில் நடக்கும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேவந்த் ரெட்டி, “இந்தப் பிரச்சினையை டெல்லி அளவில் எடுத்துச் செல்வோம். இரண்டாவது கூட்டம் ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மூடிய கதவு கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் இரண்டும் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இது பொதுமக்கள் சார்ந்த பிரச்சினை. எனவே, இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறோம்” என தெரிவித்தார்.
முன்னதாக, தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் இறுதியில் நன்றி உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “அடுத்த கூட்டத்தை ஹைதராபாத்தில் நடத்த முதல்வர் ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். அவருக்கு நன்றி. நாம் அனைவரும் அடுத்ததாக ஹைதராபாத்தில் கூடுவோம். இணைந்து போராடுவோம்; இணைந்து வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்றோர்: தமிழக முதல்வர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி. ராமாராவ், பிஜு ஜனதா தள கட்சியின் சஞ்சய் குமார் தாஸ் பர்மா, பிஜு ஜனதா தள கட்சியின் அமர் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | வாசிக்க > ‘25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு கூடாது’ – கூட்டு நடவடிக்கை குழுவின் 7 தீர்மானங்கள் என்னென்ன?