தூத்துக்குடி: “2026 தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சி இருக்குமா, இருக்காதா என்பது அரசு ஊழியர்கள் கையில்தான் உள்ளது” என சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஆ.ஜெசி தெரிவித்தார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 14-வது மாவட்ட மாநாடு தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் இன்று (மார்ச் 22) நடந்தது. மாநாட்டில், 40 ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களின் முழுநேர அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியமும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களின் பணி சுமையை கருத்தில் கொண்டு காலியாக உள்ள ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.
முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு திட்டத்தோடு இணைத்து சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சத்துணவு சமையல் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் என உயர்த்தி வழங்க வேண்டும்.
பணிக்காலத்தில் இறந்த சத்துணவு ஊழியர்களுக்கு பெண் வாரிசு இல்லை என்றால் அவர்களது ஆண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். அரசு துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களில் 30 சதவீதம் சத்துணவு ஊழியர்களுக்கு பணி மூப்பு மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆ.ஜெசி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சத்துணவு ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்தில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்காமல் வெளிமுகமை மூலமாக மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் வரவேற்கிறது. இருந்தபோதிலும் 52 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பி காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டம் நடத்தியும் தற்போதைய அரசு திரும்பிப் பார்க்காமல் உள்ளது. வரும் மே 24, 25 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் எங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வென்றெடுக்க கூடிய பல்வேறு திட்டங்கள் செய்ல்படுத்த உள்ளோம். ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்த போராட்டத்தில், தமிழக அரசு பேச்சுவார்த்தை எனக்கூறி கண்துடைப்பு நாடகத்தை மேற்கொண்டு வருகிறது.
தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் சரண்டர் விடுப்பை 1.4.2026-க்குள் வழங்கப்படும் என கூறியுள்ளனர். ஆனால், வரும் 2026-ல் திமுக ஆட்சி இருக்குமா? இல்லையா? என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் கையில் தான் உள்ளது. 40 ஆண்டு காலமாக சத்துணவு ஊழியர்களாக பணியாற்றிய காலமுறை ஊதியம் வழங்கப்படும் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது கண்டுகொள்ளாமல் இருப்பது, சத்துணவு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் மீதமுள்ள ஓராண்டுக்குள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் எங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர் போராட்டத்துக்கு செல்வோம்,” என்று அவர் கூறினார். இந்த மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயபாக்கியம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கர், மாவட்ட இணைச்செயலாளர் விஜயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் பெருமாள் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னரசி வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் உமாதேவி, மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.செல்லதுரை வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் எஸ்.வேல்முருகன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் இல.ராமமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திர பிரபு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஞானராஜ், தமிழ்நாடு மின் துறை ஊழியர் சங்க பொதுச் செயலாளர் மகாராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சாம் டானியல் ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மாநாட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தே.முருகன், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஆ.ஜெசி, முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில துணைத்தலைவர் மு.தமிழரசன் மாநாட்டு நிறைவுரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் மோகனா நன்றி கூறினார்.