Amit Shah: “ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்'' – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

மத்திய அரசு, தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டுவரத் தீவிரம் காட்டி வரும் ‘தேசியக் கல்விக் கொள்கை’, ‘தொகுதி மறுவரையறை’ திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி நாடாளுமன்றத்தில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை பெயரிலான இந்தித் திணிப்பையும் எதிர்த்து தற்போது நடைபெறும் நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் விவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ் மொழியை தூக்கிப்பிடித்து இந்தித் திணிப்பிற்கு எதிராகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழ்நாடு பட்ஜெட்டில் ‘ரூ’ எனக் குறியீடு மாற்றி பேசுபொருளை கிளப்பியது.

மு.க. ஸ்டாலின்

இதுகுறித்து நேற்று (மார்ச் 21) நாடாளுமன்றத்தில் பேசியிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்களின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. அலுவலக மொழிகள் துறையின் கீழ், இந்திய மொழிகள் பிரிவை மோடி அரசு அமைத்து உள்ளது. இந்த துறையானது தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மேம்படுத்துவதற்காக செயல்படும்.

டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு அவர்களின் மொழிகளில் கடிதம் எழுதுகிறேன். தங்களின் ஊழலை மறைப்பதற்காக மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இதுவே எனது பதில்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள்? தென் மாநில மொழிகளை நாங்கள் எதிர்ப்பதாக சொல்கிறார்கள்? இது எப்படி சாத்தியமாகும்? நான் குஜராத்தில் இருந்து வந்துள்ளேன். நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இருந்து வந்துள்ளார். எப்படி நாங்கள் அதனை எதிர்ப்போம்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் மொழிகளுக்காக பணியாற்றி உள்ளோம்.

தமிழக அரசுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான பாடங்களை தமிழி்ல் மொழி பெயர்க்க உங்களுக்கு தைரியம் இல்லை. இதனை இரண்டு ஆண்டுகளாக நான் சொல்லி வருகிறேன். அதை உங்களால் செய்ய முடியாது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் வழங்குவோம்.

அமித்ஷா

மொழியின் பெயரால் விஷத்தைப் பரப்புபவர்களுக்கு, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவில் உள்ள மொழியைப் பிடிக்கிறது. ஆனால், இந்திய மொழியைப் பிடிக்கவில்லை. எந்த இந்திய மொழிக்கும் இந்தி போட்டி கிடையாது என்பதை நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். மொழியின் பெயரால் நாட்டில் ஏற்பட்டு உள்ள பிளவு போதும். இனிமேலும் அப்படி நடக்கக்கூடாது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் இந்தி நண்பனாக உள்ளது. அனைத்து இந்திய மொழிகளும் இந்தியில் இருந்து பலம் பெறுகிறது. அதேபோல், அனைத்து இந்திய மொழிகளில் இருந்தும் இந்தி பலம் பெறுகிறது” என்று பேசியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.