சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவிருக்கும் ஐ.பி.எல் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்திருந்தது. அதில் சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

ருத்துராஜிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்,
“தோனியின் உடற்தகுதியை பற்றி சொல்லுங்கள். அவரை ‘Impact Player’ ஆக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறதா?”
“அவர் ஏற்கனவே ‘Impact Player’ தான். அவரை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அத்தனை வீரர்களும் உத்வேகம் பெறுகிறோம். அவர் பந்துகளை கனெக்ட் செய்து அடிக்கும் அளவுக்கு எங்களால் கூட அடிக்க முடியவில்லை. 43 வயதில் அணிக்காக அவர் செய்து வரும் பணிகள் பாராட்டுக்குரியது. அவர் அணிக்காக செய்யும் பணியை அப்படியே தொடர்ந்து செய்வார்.
தோனி தனது பயிற்சியையும் எளிமையானதாக வைத்துக் கொள்கிறார். அவர் அணிக்காக என்ன செய்யப்போகிறார் என்பதில் தெளிவாக இருக்கிறார். அதற்கேற்பதான் பயிற்சியும் செய்கிறார். முதல் நாளிலிருந்தே முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். 50 வயதில் இப்போது சச்சின் ஆடியவிதத்தை பார்த்திருப்பீர்கள். அதேமாதிரி, தோனிக்கும் கிரிக்கெட்டில் இன்னும் நிறைய காலம் இருக்கிறது.”
“உங்களுடன் ஓப்பனிங் இறங்கப்போவது யார்? ரச்சினா? கான்வேவா?”
“ஓப்பனிங் கூட்டணி எதுவென்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். அதை இப்போது சொல்ல முடியாது. நாளை போட்டியில் பார்த்தே தெரிந்துகொள்ளுங்கள். நான், ரச்சின், கான்வே என மூவரும் டாப் 3 இல் எங்கு வேண்டுமானாலும் இறங்கும் திறனோடு இருக்கிறோம். ராகுல் திரிபாதியும் திறன்மிக்க வீரர். எங்களுக்கு நிறைய ஆப்சன்கள் இருக்கிறது. இது நல்ல தலைவலிதான்.”

“சேப்பாக்கம் பிட்ச் 2019 வரைக்கும் ஒருவிதத்தில் இருந்தது. ஸ்பின்னர்கள் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்கள். கடந்த சீசனில் பிட்ச் வேறுவிதமாக இருந்தது. ஸ்பின்னர்கள் அதிகமாக விக்கெட் எடுக்கவில்லை. இந்த சீசனில் பிட்ச் எப்படியிருக்கும்?”
“பிட்ச் எப்படியிருக்கும் என்பதை கணிப்பது கடினமான விஷயம்தான். இன்னும் என்னால் சரியான முடிவுக்கு வர முடியவில்லை. பிட்ச் க்யூரேட்டரின் பணிதான் இங்கே முக்கியமானது. ஆனால், பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தாலும் சரி பௌலிங்குக்கு சாதகமாக இருந்தாலும் சரி அதை சமாளிக்கும் திறனுடைய வீரர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள். அதனால் அதைப் பற்றி நாங்கள் பெரிதாக கவலைகொள்ளவில்லை.”
“நீண்ட காலம் கழித்து சென்னை அணியில் நிறைய தமிழக வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு லெவனில் இடம் கிடைக்குமா?”
“அதெல்லாம் அணியின் காம்பீனேஷனையும் தேவையையும் பொறுத்தது. அணிக்கு தேவைப்படும்பட்சத்தில் எந்த மாநில வீரர்களையும் பயன்படுத்துவோம்.”
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
