18 வது ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி இன்று இரவு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. கொல்கத்தாவும் பெங்களூரும் மோதப்போகும் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வானிலை தகவல்கள் செய்தி சொல்கின்றன.

இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி நடைபெறவிருக்கும் நிலையில் நேற்று இரு அணிகளுமே கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. ஆனால், நேற்று மாலையுமே மழை பெய்ததால் இரு அணிகளின் பயிற்சி செஷன்களும் திட்டமிட்டதற்கு முன்பே முடித்துக் கொள்ளப்பட்டது. ஈடன் கார்டன் மைதானம் முழுவதுமாக கவர்ஸால் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் கொல்கத்தாவில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
கொல்கத்தாவில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஒருவேளை போட்டி மழையால் பாதிக்கப்படும்பட்சத்தில் போட்டியை தொடங்க இரவு 10:56 மணி வரை கெடு இருக்கிறது. டாஸ் போடப்பட்டு முதல் பந்தை 10:56 க்கு வீசினால் குறைந்தபட்சமாக 5 ஓவர் போட்டியாக நடத்தி முடித்துவிட முடியும். 10:56 யை கடந்தும் போட்டி ஆரம்பிக்கவில்லையெனில், போட்டி அப்படியே கைவிடப்படும். இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கொடுக்கப்படும்.

ஆனால், கொல்கத்தாவில் டாஸ் போடப்படும் 7 மணி சமயத்தில் 10% அளவுக்கே மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. 11 மணி வாக்கில்தான் 70% அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும்பட்சத்தில் போட்டி மிகப்பெரியளவில் மழையால் பாதிக்கப்படாது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
