சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை, பெரியகுளம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. ராஜபாளையம், திருநெல்வேலி மாவட்டத்தின் ஊத்து, கழுகுமலை ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
பாளையம்கோட்டை, ஓசூர், சேரன்மகாதேவி, எட்டயபுரம், திருநெல்வேலி, உதகமண்டலம், கோவில்பட்டி, அரண்மனைப்புதூர், களக்காடு ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
கரூர் பரமத்தி மற்றும் மதுரை விமான நிலையம் ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக 37.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவியது.
கனமழைக்கான வாய்ப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழ்சி நிலவுகிறது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கான வானிலை: இன்று (23.03.2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.