புதுடெல்லி: “பொருள்கள் பாதுகாப்பு அறையில் நானோ எனது குடும்பத்தினரோ எந்த பணத்தையும் வைக்கவில்லை” என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்துள்ளார். மேலும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படுவதை அவர் கடுமையாக மறுத்துள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்தியாய்க்கு, நீதிபதி வர்மா எழுதி இருக்கும் பதில் கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள கேட்டுக்கொண்டிருந்தார். நீதிபதி வர்மா தனது விளக்கக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: “அந்த பணம் குறித்து எனக்கோ எனது குடும்பத்தாருக்கோ எதுவும் தெரியாது. அந்தப் பணத்துடன் எங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. துரதிருஷ்டவசமாக அன்றைய இரவில் எடுத்ததாகக் கூறப்படும் பணம் எனது உறவினர்களிடமோ, பணியாளர்களிடமோ காட்டப்படவில்லை.
எனது வீட்டின் பொருள்கள் பாதுகாப்பு அறையில் இருந்து பண மூட்டை எடுக்கப்பட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டினை நான் கடுமையாக மறுக்கிறேன், முற்றிலும் நிராகரிக்கிறேன். மேலே குறிப்பட்ட எந்த எரிந்து போன பண முட்டைகளை யாரும் எங்களுக்கு காட்டவோ, எங்களிடம் ஒப்படைக்கவோ இல்லை. உண்மையில் அன்று இரவில் அகற்ற முயன்ற எரிந்த குப்பைகளில் ஒரு பகுதி இன்னும் என் வீட்டில்தான் உள்ளது.
அன்று அதவாது 14 – 15 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் எனது அதிகாரப்பூர்வ இல்லத்தின் பணியாளர்கள் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் பொருள்கள் பாதுகாப்பு அறையில் தீ பிடித்துள்ளது. அந்த அறையில் யாரும் பயன்படுத்தாத பொருள்கள், பாட்டில்கள், மண்பாண்டங்கள், மெத்தைகள், பழைய கார்ப்பெட்கள், ஸ்பீக்கர்கள், தோட்டத்துப் பொருட்கள் போன்றவற்றைப் போட்டுவைத்திருப்போம்.
எப்போது திறந்தே கிடக்கும் அந்த அறைக்கு முன்வாசல் கதவு மற்றும் பணியாளர்கள் குடியிருப்பின் பின்கதவு என இரண்டு வழியாகவும் செல்லலாம். அது பிரதான வீட்டின் ஒரு பகுதியாகவோ அல்லது ஊடகங்களில் சொல்லப்பட்டது போல எனது வீட்டின் ஒரு பகுதியாகவோ இல்லை.
தீ விபத்து நடந்த அன்று நானும் எனது மனைவியும் வீட்டில் இல்லை. மத்தியப்பிரதேசத்துக்குச் சென்றிருந்தோம். எனது மகளும் வயாதான தாயரும் மட்டுமே வீட்டில் இருந்தனர். 15ம் தேதி மாலையில் தான் நானும் எனது மனைவியும் போபாலில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி வந்தோம்.
தீயை அணைக்கும் பணியின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக எனது குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீ அணைக்கப்பட்டு அவர்கள் மீண்டும் அங்கு வந்தபோது எந்தப் பணத்தையும் அவர்கள் பார்க்கவில்லை.
பொருள்கள் பாதுகாப்பு அறையில் நானோ எனது குடும்பத்தினரோ எந்த பணத்தையும் வைக்கவில்லை என்று நான் உறுதியாக கூறுகிறேன். அங்கிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணத்துக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நானோ எனது குடும்பத்தினரோ பணத்தை அங்கு பதுக்கி வைத்திருந்தோம் எனக்கூறுவது முற்றிலும் அபத்தமானது.
அந்த பொருள்கள் பாதுகாப்பு அறை எனது வசிப்பிடத்தில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் இருந்து ஒரு சுற்றுச்சுவர் அதனை பிரிக்கிறது. என் மீது அவதூறுக் குற்றச்சாட்டினை சுமத்துவதற்கு முன்பு ஊடகங்கள் குறைந்தபட்சம் அதுகுறித்து என்னிடம் விசாரித்திருக்க வேண்டும்” இவ்வாறு நீதிபதி வர்மா தெரிவித்துள்ளார்.
முன்னதாக மார்ச் 14ம் தேதி ஹோலி அன்று இரவு 11.45 மணிக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த வர்மா வீட்டில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. அதுகுறித்து தகவல் அறிந்து தீயை அணைப்பதற்காக வந்த தீயணைப்புத் துறையினர் அங்கிருந்து கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணத்தை எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனிடையே வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நீதிபதி வர்மா மீது உள்-விசாரணை ஒன்றினை நடத்துவார். அதேபோல் அவரை மீண்டும் அலகாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.