வாஷிங்டன்,
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பிரதிப்குமார் படேல் (வயது 54). இவரது மகள் ஊர்மி (24). இருவரும் அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை இருவரும் வழக்கம் போல பணிக்கு வந்த போது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சூப்பர் மார்க்கெட் வாசலிலேயே இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அகோமாக் கவுண்டி போலீசார் கூறியதாவது:-, “மார்ச் 20-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக தகவல் வந்தது. இதையடுத்து,சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து சென்ற போது, கடை ஒன்றில் துப்பாக்கி சூடு காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார்.
தொடர்ந்து அந்த கட்டிடத்தை ஆராய்ந்ததில் இளம்பெண் ஒருவரும் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் கிடந்தார். அடையாளம் காணப்படாத அந்தப் பெண், சென்ட்ரா நோர்ஃர்லோக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். என்றாலும் காயம் காரணமாக அவர் அங்கு உயிரிழந்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்ஜ் ப்ராஷியர் தேவோன் வார்டன் (44) என்ற அந்த நபர் தற்போது அகோமாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபானம் கிடைக்காத விரக்தியில் சூப்பர் மார்கெட்டை திறக்க வந்த படேல் மற்றும் அவரது மகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் அதன் தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.