மதுரை: இறந்த மகனின் ஓய்வூதிய பலனில் தாயாருக்கும் உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கருவூலத்தில் உதவியாளராக பணிபுரிந்தவர் முருகேசன். இவர் கடந்த 2022-ல் கரோனா பரவல் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து தனது கணவருக்குரிய ஓய்வூதியப் பலன்களை கேட்டு அவரது மனைவி தமிழ்ச்செல்வி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சமீம் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருவூலத்துறை சார்பில் மனுதாரருக்கு ஏற்கெனவே குடும்ப நல நிதி, விடுமுறை ஊதியம், பிஎப், பொது பிஎப் என்ற கணக்கீட்டுபடி ரூ.17.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.15.25 லட்சம் பாக்கியுள்ளது. மனுதாரர் கணவரின் தாயார் கலையரசி, இறந்து போன தன் மகனுக்குரிய பணிக்கொடை பணத்தில் தனக்கு ஒரு பகுதி வழங்கக் கோரி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் பாக்கிப்பணம் வழங்கப்படாமல் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
கலையரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிடுகையில், இறந்த மகனின் பணப்பலன்களில் தாயாருக்கும் பங்கு உண்டு. அந்த அடிப்படையில் மனுதாரரின் கணவருக்குரிய பணப்பலன்களில் பங்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதி, ”மனுதாரரின் கணவர் 3வது எதிர்மனுதாரரின் உண்மையான மகன். மகன் வேலைக்கு செல்ல தாயார் அன்பு, பாசம் உள்பட அனைத்து உதவிகளையும் வழங்கியுள்ளார். இதனால் மனுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன் பாக்கியில் தாயாருக்கும் உரிமை உண்டு. இதனால் மனுதாரருக்கு ரூ.8,15,277 பணத்தையும், தாயார் கலையரசிக்கு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.