கொல்கத்தா,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்கியது. கடந்த 2008-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. இந்த நிலையில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் நாளான இன்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவரில் 3 விக்கெட் இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு அணியின் கோலி 59, பில் சால்ட் 56, கேப்டன் பட்டிதார் 34 ரன்கள் எடுத்தனர்.கொல்கத்தா அணி கேப்டன் ரஹானே 56, சுனில் நரின் 44, ரகுவன்ஷி 30 ரன்கள் எடுத்தனர்.பெங்களூரு அணியின் க்ருணால் பாண்டியா 3, ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கொல்கத்தா அணியின் அரோரா, வருண் சுனில் நரின் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 4 (CSK, DC, KKR, PBKS) வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 1000 ரன்கள் கடந்த ஒரே வீரராக சாதனை படைத்தார் விராட் கோலி.
வெற்றிக்கு பிறகு ரஜத் பட்டிதார் கூறியதாவது, ‘இந்த ஆட்டத்தில் அழுத்தம் இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த நாள் இனிய நாளாக அமைந்தது. இது போல நாங்கள் வெற்றி பெறுகின்ற ஒவ்வொரு நாளும் இனிய நாள்தான். சுயாஷ் தான் எங்கள் அணியின் விக்கெட் டேக்கிங் பவுலர். அதில் நான் உறுதியாக உள்ளேன்.
அவர் ரன் கொடுத்தாலும் அதில் சிக்கல் எதுவும் இல்லை. க்ருணல் பாண்டியா மற்றும் சுயாஷ் என இருவரும் ஆட்டத்தின் சூழலை அறிந்து 13-வது ஓவருக்கு பிறகு அபாரமாக பந்து வீசி இருந்தனர். அவர்கள் தங்கள் மனஉறுதியை வெளிப்படுத்தினர். விக்கெட் வீழ்த்த வேண்டுமென்ற அவர்களது மைண்ட் செட் அபாரமானது.
கோலி அணியில் இருப்பது எங்கள் அணியை வலுப்படுத்து, அவர் போன்ற கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த வீரரிடம் இருந்து கற்றுக்கொள்ள எனக்கு இது நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்.