ஐபிஎல் 2025 தொடர் நேற்று கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கொல்கத்தா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு அனைத்து அணிகளும் சமமான பலத்தில் இருப்பதால் ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் பவுலர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மைதானங்களும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்படுவதால் பவுலர்கள் நிறைய அடி வாங்குகின்றனர்.
ஐபிஎல்லில் உலகம் முழுவதும் உள்ள சிறந்த பவுலர்கள் விளையாடுகின்றனர். இந்தியாவில் உள்ள மைதானங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை தாண்டி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். ஒரு அணிக்கு பேஸ்ட்மேன்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோல சிறந்த பந்துவீச்சாளர்கள் முக்கியம். இந்த ஆண்டு ஐபிஎல்லில் எதிரணிக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடிய ஐந்து பந்துவீச்சாளர்களை பற்றி பார்ப்போம்.
குல்தீப் யாதவ்
இந்திய அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீச்சு வருகிறார். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி பைனல் போட்டியிலும் சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு உதவினார். பந்தை இருபுறமும் திருப்ப முடிகின்ற அசாத்திய திறமை கொண்ட குல்தீப் யாதவ் ஐபிஎல்லிலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை எடுக்கும் திறன் கொண்ட இவர் எதிரணிக்கு பயத்தை காட்டக்கூடிய ஒரு பந்துவீச்சாளராக இருப்பார். தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
யுசுவேந்திர சாஹல்
ஐபிஎல்லிலும் சரி இந்திய அணிலும் சரி மிகச்சிறந்த சுழற் பந்துவீச்சாளராக யுசுவேந்திர சாஹல் இருந்து வருகிறார். சமீபத்தில் இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தாலும் ஐபிஎல்லில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார். குல்தீப் போலவே முக்கியமான கட்டத்தில் விக்கெட்களை எடுக்கும் திறனை வைத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு இந்த ஆண்டு முக்கியமான பவுலராக பார்க்கப்படுகிறார்.
ஜோஷ் ஹேசில்வுட்
காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஜோஷ் ஹேசில்வுட் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசி இருந்தார். கடைசியாக டி20 கிரிக்கெட் விளையாடி ஒரு வருடத்திற்கு மேல் ஆனாலும் சிறப்பாக பந்து வீசி பேசியுள்ளார். பவுன்சர்களை திறமையாக போடக்கூடிய ஜோஷ் ஹேசில்வுட் இந்த ஆண்டு ஐபிஎல்லில் முக்கியமான பந்துவீச்சாளராக பார்க்கப்படுகிறார். அவரது பந்துவீச்சு ஆர்சிபி அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பவர் பிளே மற்றும் டெத் ஓவர் என அனைத்து இடங்களிலும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை எடுக்க கூடியவர்.
வருண் சக்ரவர்த்தி
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற்று தனது திறமையை நிரூபித்துள்ளார் வருண் சக்ரவர்த்தி. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் சிறப்பாக விளையாடி தற்போது ஐபிஎல்க்கு வந்துள்ளார். நேற்றைய ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி வருண் சக்கரவத்திற்கு சிறந்ததாக இல்லை என்றாலும் இந்த ஐபிஎல்லில் அவர் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு வீரராக உள்ளார். தனது வித்தியாசமான பந்துவீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை திணறடிக்க கூடிய திறமையை வருண் வைத்துள்ளார். இந்த ஆண்டு அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் வருண் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஜஸ்பிரித் பும்ரா
உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த பந்துவீச்சாளர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார் ஜஸ்பிரித் பும்ரா. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விளையாட வில்லை. ஐபிஎல்லிலும் ஒரு சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருப்பினும் அவர் காயம் குணமடைந்து ஐபிஎல்க்கு திரும்பினால் எதிரணியில் உள்ள பேட்ஸ்மன்களுக்கு நிச்சயம் ஒரு பயம் ஏற்படும். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அவருக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் அவரது ரசிகர்கள் பும்பராவின் வருகைக்காக காத்துக் கொண்டுள்ளனர்.