ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை மோதல்

சென்னை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை, மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் லீக்கில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா-பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன.

இந்நிலையில், இந்த தொடரில் நாளை 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 7.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் உள்ளதால் நாளை அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்க கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. முன்னதாக ஐதராபாத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.