திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள அஞ்சாலும்மூடு பகுதியை சேர்ந்தவர் அனிலா ரவீந்திரன் (வயது 34). போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது. ஜாமீனில் வெளியே வந்த இவர் மீண்டும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அனிலா ரவீந்திரன் கர்நாடகாவில் இருந்து போதைப்பொருளுடன் காரில் வருவதாக கொல்லம் நகர போலீஸ் கமிஷனர் கிரண் நாராயணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கொல்லம் உதவி போலீஸ் கமிஷனர் செரீப் தலைமையில் 3 தனிப்படையினர் நகரம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொல்லம் நீண்டகரை அருகே அனிலா ரவீந்திரனின் கார் நிற்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த காரை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் அவர் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றார். போலீசார் விடாமல் காரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அந்தகாரில் சோதனை நடத்தியபோது 50 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அனிலா ரவீந்திரனை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக கொல்லம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது டாக்டர்கள் பரிசோதித்த போது அனிலா தனது உள்ளாடைக்குள் 41 கிராம் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்து கொல்லம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடத்தி வந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.