திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். மேஷத்துக்கு ஏழரைச் சனி ஆரம்பம். ஆனாலும் மாறுபட்ட சிந்தனையால் சாதிக்கவைப்பார் சனி பகவான். செலவுகள் சுபச்செலவுகளாகும். வீட்டிலும் பணியிலும் பொறுப்புகள் அதிகரிக்கும்!
மேஷ ராசிக்காரர்களுக்கான 15 பலன்கள்:
1. மேஷ ராசி அன்பர்களுக்கு ஏழரைச் சனியின் காலம் ஆரம்பமாகவுள்ளது. எனினும் வீண் பதற்றம் தேவையில்லை. அவர் உங்கள் ராசிக்கு 12-ல் சென்று மறைவதால், பல காரியங்களிலும் இருந்துவந்த தடைகள் நீங்கும். உங்கள் மனதிலிருந்த அவநம்பிக்கை, மனச்சோர்வு ஆகியன நீங்கும்.
2. இதுவரையிலும் உங்கள் ராசியின் மீது இருந்த சனி பகவானின் பார்வை விலகப்போகிறது. ஆகவே மாறுபட்ட சிந்தனையாலும் அணுகுமுறையாலும் காரியம் சாதிப்பீர்கள். பல பிரச்னைகளுக்கும் எளிதில் தீர்வு காண்பீர்கள்.
3. சனி பகவான் விரயச் சனியாக பலன் தரப்போகிறார். அதனால் செலவுகள் அதிகமாகுமே என்று எண்ண வேண்டாம். செலவுகள் அனைத்தும் சுபச் செலவுகளாக அமையும். கவலை வேண்டாம். நீங்கள் சொந்த வீடு கட்டுவது, பழைய வீட்டைப் பராமரிப்பது, சேமிப்பு எனும் வகையில் செலவுகளைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
4. குடும்பத்தை எடுத்துக்கொண்டால், தாம்பத்தியம் இனிக்கும்; கணவன்-மனைவிக்குள் பனிப்போர் நீங்கும்.

5. ஏழரைச்சனிக் காலம் என்பதால் உடல் உழைப்பு, அலைச்சல் அதிகரிக்கும். அதேநேரம் சுயஜாதகம் பலம்பெற்றுள்ள அன்பர்கள் உழைப்பால் உன்னதம் அடைவார்கள்.
6. இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் இருப்பது அவசியம். சோம்பலைக் களைந்து, உடனுக்குடன் பாடப் பகுதிகளைப் படித்து முடியுங்கள். தேங்கவிடவேண்டாம்.
7. உத்தியோகத்தில், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லையே என்ற ஆதங்கம் உண்டாகும். சனி பகவான் மந்தன் ஆயிற்றே. ஆகவே, ஏழரைச் சனி காலத்தில் எதிர்பார்க்கும் காரியங்கள் சற்று தாமதமாகவே நடைபெறும்.
8. மார்ச் 29 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 2, 6 மற்றும் 9-ம் வீட்டைப் பார்க்கிறார். சனி பார்வை பலன் ஓரளவு சாதகமாகவே உள்ளது எனலாம். அவர் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். எவருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். பேச்சில் கவனம் தேவை.
9. சனி பகவான் மீனத்தில் அமர்ந்து, உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். தாய்வழிச் சொத்து வந்து சேரும். வழக்கில் திருப்பம் உண்டு.
10. சனி உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தைக்கு ஆரோக்கியத்தில் சிறு குறைகள், அசதி வந்து நீங்கும். சிக்கனம் அவசியம்.
11. இந்த ராசியைச் சேர்ந்த மத்திம வயதுப்பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்லபடி வரன் அமையும்.

12. நட்சத்திரப்படி பார்த்தால் இந்த ராசியைச் சேர்ந்த அசுவினி நட்சத்திரக் காரர்களுக்கு அலைச்சலும் பின்னர் நல்ல பலனும் உண்டாகும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் கஷ்டத்தைக் கொடுத்து பின் நன்மை உண்டாகும்.
13. வியாபாரத்தில் கடன் வாங்கி புதிய முதலீடுகள் செய்யக்கூடாது. சட்டென மாற்று வியாபாரத்தில் இறங்கிவிடவேண்டாம். பங்குதாரர்கள், வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள்.
14. உத்தியோகத்தில் வேலைப்பளுவும் பொறுப்புகளும் அதிகரிக்கும் காலம் இது. ஆகவே, கவனச் சிதறல் இல்லாமல் பணிபுரிய வேண்டும். அலுவலகத்தில் வீண் விமர்சனங்களைத் தவிர்த்துவிடவும்.
15. மே மாதம் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு சூழல் உங்களுக்குச் சாதகமாகும். சிலர், சொந்தவீடு கட்டும் யோகமும் உண்டு.