செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் கூகுள், மைக்ரோ சாஃப்ட் நிறுவனங்கள் சாட்பாட்டுகளை அறிமுகப்படுத்தியது போல ‘எக்ஸ்’ தளத்தின் ‘க்ரோக்’ ஏ.ஐ சாட்பாட்டை அறிமுகப்படுத்தினார் எலன் மஸ்க். இப்போது ‘எக்ஸ்’ தளத்தில் இந்திய பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘க்ரோக்’ சாட்பாட் அளிக்கும் பதில்களைச் சுற்றி பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது.
அண்மையில் பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்த க்ரோக், வரம்பு மீறி கொச்சையான சொற்களைப் பயன்படுத்தியதால் அப்பதிவு வைரலானது.
வரலாறு, சினிமா, அரசியல் விமர்சனங்கள், சித்தாந்தங்கள் என அனைத்துத் தலைப்புகளை ஒட்டிய கேள்விகளுக்கும் க்ரோக் வெளிப்படையான பதில்களைப் பதிவு செய்வதால் ‘எக்ஸ்’ தளத்தில் பயனர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. சிலர், க்ரோக்கின் செயல்பாடுகளைத் தணிக்கை செய்ய வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், க்ரோக்கின் பதில்களைப் பகிர்ந்து ஜெமினி ஏ.ஐ, ஓபன் ஏ.ஐ சாட்பாட்டுகளுடன் ஒப்பிடுகையில் க்ரோக் தனித்து நிற்கிறது என ஆதரவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் க்ரோக்கின் செயல்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு ‘எக்ஸ்’ தளத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகின அந்த தகவல் உண்மையல்ல என்று இப்போது தெரியவந்துள்ளது.