லடாக் பகுதியில் சீன சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து 2 மாவட்டங்களை உருவாக்கியுள்ளதற்கு, தூதரகம் மூலம் இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது என நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
லடாக்கில் இந்திய பகுதியை இணைத்து ஹோட்டன் என்ற பகுதியில் இரண்டு மாவட்டங்களை சீனா உருவாக்கியுள்ளது பற்றி மத்திய அரசுக்கு தெரியுமா? அப்படியிருந்தால், இப்பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு தூதரகம் மூலம் எடுத்த நடவடிக்கை என்ன? இந்தியா தெரிவித்த எதிர்ப்பின் விவரங்கள் என்ன? அதற்கு சீன தரப்பில் ஏதாவது பதில் அளிக்கப்பட்டதா? அக்ஷய் சின் பகுதியில் சீனா கட்டமைப்புகளை அதிகரித்து வருவதை தடுக்க, மத்திய அரசு நீண்ட கால உத்திகள் ஏதாவது உருவாக்கியுள்ளதா? என மக்களவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: சீனாவின் ஹோட்டன் பகுதியில் இரண்டு மாவட்டங்களை உருவாக்கும் சீனாவின் அறிவிப்பு மத்திய அரசுக்கு தெரியும். இந்த மாவட்டங்களின் சில பகுதிகள், இந்தியாவின் லடாக் பகுதிக்குள் வருகின்றன. இதற்கு தூதரகம் மூலமாக இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்திய பகுதியில் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்திய அரசு ஒருபோதும் ஏற்கவில்லை.
புதிய மாவட்டங்களை உருவாக்குவது, இப்பகுதியில் இந்தியாவின் இறையாண்மை குறித்த இந்தியாவின் நீண்டகால மற்றும் நிலையான நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மேலும், சீனாவின் சட்டவிரோத மற்றும் வலுக்கட்டாய ஆக்கிரமிப்புக்கு, சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காது.
எல்லைப் பகுதிகளில் சீனா கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதும் இந்திய அரசுக்கு தெரியும். அதேபோல், எல்லைப் பகுதிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளும் நிறைவேறும்.
எல்லைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு, பட்ஜெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. எல்லைகள் ரோடு அமைப்பின் (பிஆர்ஓ) செலவினங்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளன. எல்லைப் பகுதியில் சாலைகளின் நீளம், சுரங்கப் பாதைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது இப்பகுதி மக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பெரும் உதவியாக உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.