"சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு இல்லை" -சிபிஐ

மும்பை,

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி பந்த்ரா பகுதியிலுள்ள தமது வீட்டில் தூக்கில் தொங்கியபடி நடிகர் சுஷாந்தின் உடல் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகம் நாளுக்குநாள் வலுப்பெற தொடங்கியது.

சுஷாந்த் சிங்கை நடிகை ரியா சக்கரவர்த்திதான் தற்கொலைக்கு தூண்டினார் என சுஷாந்தின் தந்தை புகார் அளித்திருந்தார். சுஷாந்தின் தந்தை அளித்த மனுவை விசாரித்து, ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வந்த நிலையில், வழக்கின் விசாரணை இறுதி அறிக்கையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சீல் செய்யப்பட்ட கவரில் நேற்று சமர்ப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை. சமூக வலைதளங்களில் பேசப்பட்ட அனைத்து தகவல்களும் தவறானவை.

அவரது மரணம் கொலை என்று சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்திருக்கலாம்” என சிபிஐ தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.