திஷா சலியன் மர்ம மரண வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 2-ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேலாளராக இருந்தவர் திஷா சலியன். மும்பையின் மலாட் பகுதியில் வசித்து வந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது விபத்து மரணம் என போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில், ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் பாந்த்ரா பகுதியில் உள்ள தனது குடியிருப்பில் இறந்து கிடந்தார். இது தற்கொலை என மும்பை போலீஸார் முதலில் தெரிவித்தனர். இதற்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
அதேநேரம், திஷா மரண வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் (எஸ்ஐடி) ஒப்படைக்கப்பட்டது. இதுவரை அக்குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த சூழ்நிலையில், திஷாவின் தந்தை சதிஷ் சலியன் மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “எனது மகள் மரணத்தில் மர்மம் உள்ளதால், அவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும். குறிப்பாக சிவசேனா (உத்தவ்) எம்.எல்.ஏ. ஆதித்யா தாக்கரே, நடிகர்கள் சூரஜ் பஞ்சோலி மற்றும் தினோ மோரியா மீதும் வழக்கு பதிவு செய்து விசராணை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் ரேவதி மொஹிதே-தேரே மற்றும் நீலா கே.கோகலே அமர்வு முன்பு வரும் ஏப்ரல் 2-ம் தேதி விசாரணை நடைபெறும் என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.