ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தர்ம வைத்தியசாலை நூற்றாண்டு விழாவையொட்டி, வைத்தியசாலையில் புதிதாக விவேகானந்தா மருந்தக த்தையும், புதுப்பிக்கப்பட்ட சாரதா பல் மருத்துவ மையத்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் கடந்த 127 ஆண்டுகளாக மக்கள் சேவையாற்றி வருகிறது. இந்த மடத்தின் முக்கிய சேவைகளுள் ஒன்றான தர்ம வைத்தியசாலை, 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு, பல் மருத்துவம், மகப்பேறு, நரம்பியல், எலும்பியல், கண், காது, மூக்கு சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் நோய், இரைப்பை – குடல் நோய், நீரிழிவு சிகிச்சை மற்றும் புற்றுநோய், தைராய்டு உள்ளிட்டவைகளுக்கு தீவிர ஆலோசனைகள் என ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தர்ம வைத்தியசாலை தொடங்கி நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழாவையொட்டி, வைத்தியசாலையில் புதிதாக மருந்தகம் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வந்த பல் மருத்துவ மையம் புதிக்கப்பட்டு தரம் உயர்த்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில், அந்த பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டுக்காக அதனை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகாராஜ், தொழிலதிபர் டாக்டர் நல்லி குப்புசாமி, ராமச்சந்திரா நிகர்நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் உமா சேகர், பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலர் ஞானவரதானந்தாஜி மகராஜ், பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை வேந்தர் ஆத்ம பிரியானந்தாஜி மகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘இந்தியாவை பொறுத்தவரை தமிழகம் மருத்துவ சேவையில் சிறந்து விளங்குகிறது. வெளி நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் 25 சதவீதம் தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெறு கின்றனர். அந்தவகையில், 40 நாடுகளில் இருந்து 15 லட்சம் பேர் சிகிச்சைக்காக வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிறந்து விளங்குவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தர்ம வைத்தியசாலை அடித்தளமாக அமைந்திருக்கிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளின் இணையற்ற மருத்துவ சேவையால் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு உயர்ந்து வருகிறது,’ என்றார்.