திமுக அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால் விடுமுறை நாளில் கூட போராட்டக் களத்தில் நின்று அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர் என தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்குப் பழைய ஓய்வூதியத்திட்டம் வழங்கப்படுவதில்லை. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்குப் பணி ஓய்விற்குப் பிறகு மாதாமாதம் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உட்பட எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் முக்கிய அம்சங்களுள் இதுவும் ஒன்றாகும்.
ஜாக்டோ ஜியோ போராட்டம் என்பது தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டமாகும். லட்சக்கணக்கான குடும்பங்களை மனதில் வைத்து, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும். அரசி இயந்திரத்தின் நிர்வாக அச்சாணியான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசிப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, அதற்கான நியாயமான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை ஆகும்.
அதை இப்போது இருக்கும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசு செய்ய முன்வரவில்லை. அதை விடுத்து கண்துடைப்புக்காகப் பேச்சுவார்த்தை மட்டும் நடத்திவிட்டு, கண்டும் காணாமல் கை விட்டுவிட்டது. திமுக அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளில் கூட போராட்டக் களத்தில் உள்ளனர். இது மிகப் பெரிய கையறு நிலை ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.