புதுடெல்லி: நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் அச்சமற்ற முயற்சி நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி: தியாகிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று, நமது நாடு பகத் சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் உன்னத தியாகத்தை நினைவுகூர்கிறது. சுதந்திரம் மற்றும் நீதிக்கான அவர்களின் அச்சமற்ற முயற்சி நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாரத தாய்க்காக உயர்ந்த தியாகத்தைச் செய்த தியாகிகள் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோரை நினைவுகூர்ந்து ‘தியாகிகள் தினத்தில்’ எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன். இந்தப் பெரும் புரட்சியாளர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் தேசபக்தியை விட பெரிய கடமை எதுவும் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். தங்கள் வீரம் மற்றும் துடிப்பான சிந்தனை மூலம் இளைஞர்களிடம் தேசபக்தியை விதைத்து நாடு தழுவிய சுதந்திர இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரின் தியாகம், ‘நாட்டின் நலனே முக்கியம்’ என்று செய்தியை மக்களிடம் தொடர்ந்து வழங்கும்” என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “‘தியாகிகள் தினத்தில்’ பாரத தாயின் அழியாத புதல்வர்களான பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். இந்திய தாய் நாட்டை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அனைத்தையும் தியாகம் செய்த புரட்சியாளர்களிடையே இந்த மூவரின் பெயர்களும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். தாய்நாட்டிற்கான சேவையில் அவர்களது இணையற்ற துணிச்சலும் தியாக மனப்பான்மையும் எப்போதும் நமக்கு உத்வேகமளிக்கும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி, “பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரின் தியாக தினத்தில் அவர்களுக்கு பணிவான அஞ்சலி. அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிரான அவரது அச்சமற்ற போராட்டமும், உயர்ந்த தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. பகத்சிங்கின் போராட்டம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானது மட்டுமல்ல, சாதியம் மற்றும் சமூக பாகுபாட்டிற்கு எதிராகவும் அவர் போராடினார். சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அவரது சிந்தனைகள் எப்போதும் நமக்கு உத்வேகம் அளிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே “பகத் சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோரின் புரட்சிகர உணர்வும் எண்ணங்களும் எப்போதும் அழியாமல் இருக்கும். தாய்நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அழியாத தியாகிகளுக்கு எங்கள் பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.