தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் கூட்டம் நடைபெற்றது. எந்த ஊழலை மறைக்க இந்த நாடகம் நடத்தப்பட்டது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
திமுக அரசு சம்பந்தமில்லாமல் ஒரு பிரச்சினையைக் கிளப்புகிறது என்றால், எதையோ மூடி மறைத்து, மக்களை மடைமாற்றத் துடிக்கிறது என்று அர்த்தம். மும்மொழிக் கொள்கை எதிர்ப்புக்கு பின்னால், டாஸ்மாக் மெகா ஊழல் ஒளிந்துள்ளது.
கர்நாடக அரசிடம் முறையிட்டு, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரைப் பெற்றுத் தர துணிவில்லை. கேரள அரசைக் கண்டித்து, தமிழகத்தில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த திராணியில்லை. ஆனால், அவர்களை இணைத்துக் கொண்டு, தமிழக உரிமைகளை காக்கப் போகிறீர்களா?
தொகுதி மறுவரையறை மக்கள்தொகை அடிப்படையில் இருக்காது, அதனால் எந்த மாநிலத்தின் தொகுதிகளும் குறைக்கப்படாது எனவும் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக்கிய பிறகும்கூட, கூட்டம் போடுவது யாரை ஏமாற்றுவதற்காக? எந்த ஊழலை மறைக்க இந்த நாடகம்? மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்று கூறியது உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ். நியாயப்படி அவர்களைத் தானே நீங்கள் எதிர்க்க வேண்டும்? ஆனால், காங்கிரஸாரின் கூற்றை எதிர்த்துப் போராட, அவர்களையே அழைத்துள்ளீர்களே, உங்கள் அரசியல் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லையா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.