கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5-ம் தேதி இலங்கையில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டு அதிபர் அநுரா குமார திசாநாயக்க கூறினார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ‘பிம்ஸ்டெக்’ அமைப்பின் 6-வது உச்சி மாநாடு ஏப்ரல் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் தாய்லாந்தில் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டுக்கு பிறகு ஏப்ரல் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைதர இருப்பதாக அந்நாட்டு அதிபர் அநுரா குமார திசாநாயக்க நேற்று முன்தினம் கூறினார்.
இலங்கை அதிபர் திசாநாயக்க கடந்த டிசம்பரில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது விவாதிக்கப்பட்ட ஒப்பந்தங்களை இறுதி செய்யும் நோக்கத்துடன் பிரதமர் மோடி இலங்கை வருவதாக அந்நாட்டு செய்தி இணைய தளம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
திசாநாயக்க தனது டெல்லி பயணத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போதும் அதற்கு பிறகும் இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். பொருளாதார ரீதியாக, இலங்கை தனது சொந்தக் காலில் நிற்க இந்தியா அப்போது உதவியது.
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் மோடியின் பயணத்தின்போது தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
சம்பூரில் சூரிய மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவி, இயக்க இரு நாடுகளும் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கை மின்சார வாரியமும் இந்தியாவின் தேசிய அனல்மின் கழகமும் இணைந்து இதற்கான பணியில் ஈடுபட உள்ளன.
இத்திட்டம் 2 கட்டங்களை கொண்டதாகும். முதல்கட்டத்தில் 50 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையமும் இரண்டாவது கட்டத்தில் 70 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையமும் நிறுவப்படும்.