புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் இப்தார் விருந்தைப் புறக்கணிக்க பல்வேறு முஸ்லிம்கள் அமைப்புகள் முடிவு செய்திருப்பது அம்மாநில அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) பிஹாரில் தலைமை வகிப்பது ஐக்கிய ஜனதா தளம். இதன் தலைவரான நிதிஷ்குமார், பாஜக ஆதரவுடன் முதல் அமைச்சராக உள்ளார். இங்குள்ள முக்கிய எதிர்கட்சியான லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்திடம்(ஆர்ஜேடி) முஸ்லிம்கள் ஆதரவு இருந்தது. இது, மெல்ல முதல்வர் நிதிஷுக்கு மாறியதால் அவர் தொடர்ந்து ஐந்தாவது முறை முதல்வராக உள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் முதல்வர் நிதிஷ் இந்த வருடமும் ரம்ஜான் மாதத்தின் நோன்பிற்காக இப்தார் விருந்து நடத்துகிறார். இன்று மார்ச் 23 மாலை நடைபெறவிருக்கும் விருந்தை பிஹாரின் பல முஸ்லிம் அமைப்புகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. பிஹாரின் சட்டப்பேரவைக்கு இந்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் வரும் நிலையில், முதல்வர் நிதிஷுக்கு சிக்கல் உருவாகி உள்ளது. வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் முஸ்லிம்கள் லாலுவின் ஆர்ஜேடியுடன் செல்வார்கள் என சர்ச்சை கிளம்பியுள்ளது.
பிஹாரில் முதல்வர் நிதிஷ் அங்கம் வகிக்கும் என்டிஏ, மத்தியில் வஃக்பு வாரியச் சட்டத்தில் திருத்தம் செய்கிறது. இதற்கு நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வஃக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு முதல்வர் நிதிஷின் கட்சியும் ஆதரவளித்திருந்தது. இதனால், அவர் ஏற்பாடு செய்யும் இப்தார் விருந்தை பிஹார் மற்றும் தேசிய அளவிலான முஸ்லிம் அமைப்புகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த பட்டியலில் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம், இமாரத்-எ-ஷரியா, ஜாமத்-எ-உலமா ஹிந்த், ஜமாத்-எ- அஹ்லே ஹதீஸ், ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த், கான்கா முஜிபியா மற்றும் கான்கா ரஹ்மானி ஆகியன இடம் பெற்றுள்ளன. பிஹாரின் அரசியல் நிபுணர்களின் கூற்றுப்படி, முஸ்லிம்களின் இந்த முடிவு சட்டமன்றத் தேர்தலில் என்டிஏவின் சிரமங்களை அதிகரிக்கக்கூடும். முஸ்லிம் அமைப்புகளின் இந்த நடவடிக்கை பிஹாரின் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவிற்கு சாதகமாகும் எனக் கணிக்கின்றனர்.
இப்தார் விருந்தை புறக்கணிப்பதற்கானக் காரணங்களை முஸ்லிம் அமைப்புகள் முதல்வர் நிதிஷுக்கு எழுதியக் கடிதத்தில், ‘உங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் வஃக்ப் சட்டதிருத்த மசோதா 2024 ஐ ஆதரித்தது. எனவே, உங்கள் இப்தார் விருந்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். இந்திய அரசியலமைப்பை மீறும் இந்த சட்டம், முஸ்லிம்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலையை மேலும் மோசமாக்கும். மதச்சார்பற்ற ஆட்சியையும் சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாதுகாப்பதாக நீங்கள் உறுதி அளித்திருந்தீர்கள். ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வஃக்பு சட்டத்தை ஆதரிப்பது, நீங்கள் அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது.’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பிஹாரில் 2020 தேர்தலுக்குப் பிறகு, இதுவரை 10 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில், ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி 9 இடங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், இன்றைய இப்தார் விருந்து புறக்கணிப்பு, பிஹார் அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு என்டிஏவிற்கு சிக்கல்களை உருவாக்கும் சூழலை உருவாகி உள்ளது.