செங்குன்றம்: உறவினர்களை சந்திக்க அனுமதிக்க கோரி நேர்காணல் அறை தடுப்பு கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட விசாரணை கைதியால் புழல் மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, புழல் மத்திய சிறையில் உள்ள விசாரணை பிரிவில் அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளில் ஒருவர் சென்னை, காசிமேடு பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர்( 34). இவர், சென்னை- மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைதாகி கடந்த 2014 -ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கிறிஸ்டோபர் சிறையில் அடிக்கடி கஞ்சா பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க 3 மாதங்கள் தடை விதித்துள்ளது சிறை நிர்வாகம். இச்சூழலில், நேற்று கிறிஸ்டோபரை சந்திக்க அவரது உறவினர்கள் நேர்காணல் அறைக்கு வந்ததாக சிறை கைதி ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கிறிஸ்டோபர் சிறையில் உள்ள நேர்காணல் அறைக்கு சென்று, ’என்னை சந்திக்க உறவினர்கள் வந்துள்ளார்கள். அவர்களை சந்திக்க அனுமதிக்கவேண்டும் என, சிறை காவலர்களிடம் கேட்டுள்ளார்.
அப்போது, சிறை காவலர்கள், ”யாரும் உங்களை சந்திக்க வரவில்லை. நீங்கள் உங்கள் அறைக்கு செல்லுங்கள்” என்று கூறியுள்ளனர். இதனால், கிறிஸ்டோபர் சிறை காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல், நேர்காணல் அறையின் தடுப்பு கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டார். இதில் கிறிஸ்டோபருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து, புழல் மத்திய சிறை நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், புழல் போலீஸார் கிறிஸ்டோபர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சென்னை- பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்( 21). இவர் அடிதடி வழக்கு தொடர்பாக சென்னை புளியந்தோப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று புழல் மத்திய சிறையின் விசாரணை பிரிவில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைப்பதற்கு முன்னதாக விக்னேஷை காவலர்கள் சோதனை செய்தனர். அச்சோதனையில், விக்னேஷ், 3 கிராம் கஞ்சாவை உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.